|
கங்கை கொண்ட சோழபுரம் - 2 For a picture version of this post, go here. ஓலை வேயப்பட்ட இடங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், கீஈஈஈஈஈழே...மனிதர்கள் எறும்புகளைவிடச் சிறிய புள்ளிகளாகத் தெரிந்தனர். அவ்வப்பொழுது சிலர் என்னவோ சாரத்தில் அசைகிறதே? என்று நிமிர்ந்து பார்க்க, ஓலை வழியே கையைசைத்தோம். (அதைப் பார்த்து அவர்கள் என்ன நினைத்தார்களோ, கடவுளுக்கே வெளிச்சம். ஐயோ! அங்க ஆரோ மனுசங்க இருக்காங்கடீ! என்ற குரல் ஒன்று கேட்டதாக ம(மெ)கா திருப்தியுடன் நண்பர் ஒருவர் அறிவித்தவுடன் ஏற்பட்ட சந்தோஷத்தைத் தவிர்க்க முடியவில்லை.)
சாரப் பலகைகளின் மேல் நின்றவாறு, காரைப் பூச்சால் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்களை ரசித்தோம். ஓரிடத்தில் லிங்கோத்பவர் கம்பீரமாகக் காட்சியளித்தார். அருகிலேயே தட்சிணாமூர்த்தி சாந்தமாக அமர்ந்திருந்தார். இன்னோர் இடத்தில், குழந்தை விநாயகரின் கூந்தலில், சிவபெருமான அருமையுடன் கொன்றை மலர்களை சூட்டிக்கொண்டிருந்தார்!
![]() நாஸிகா என்று கூறப்படும் வளைவுகள் வெவ்வேறு தெய்வ உருவங்களுக்கிடையில் கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தன. கோரமான பற்கள் தெரியும் புன்னகையுடன், சிங்க முகங்களும் எங்களை வரவேற்றன.
டாக்டர். கலைக்கோவன் எங்களுடன் சேர்ந்துகொண்டவுடன், வாழ்நாளில் அதுவரை நாங்கள் அடைந்திராத நூதனமான ஒரு அனுபவம் எங்களுக்கு வாய்த்தது. தரையிலிருந்து அத்தனை அடி உயரத்தில், எங்களை நழுவவிடாமல் காப்பாற்றிகொண்டிருந்த சில மரப்பலகைகளின் மீது, க.கொ.சோழபுரத்தின் விமானத்தின் மேற்பகுதியைப் பற்றிய பாடம் ஆரம்பமாகியது.
போதிகைகளின் மேற்புறம், வாஜனம், கபோதம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. பிரம்மாண்டமான கோயில் என்பதால், கோயிலின் வெவ்வேறு பாகங்களும் அதற்கேற்ற அளவில் அமைக்கப்பட்டிருந்தன. விமானத்தின் உட்புற அமைப்பை வெளிப்பார்வையிலிருந்து மறைக்கும் விதமாக, வெளிப்புறம் திறமையாக அமைக்கப்பட்டிருந்த வித்தையை நாங்கள் அறிந்துகொண்டோம். உட்புறம், சுவர் மூலை திரும்பும் இடத்தில் லேசாக வளைக்கப்பட்டிருந்ததல்லவா? வெளிப்புறம், விமானம் எண்கோணமாக அமைக்கப்பட்டிருந்தது. வெளிப்புற அமைப்பை வைத்து, உட்புறம் விமானத்தின் அமைப்பை சொல்ல முடியாதபடி அக்கால ஸ்தபதிகள் விமானத்தைத் திறமையாக அமைத்திருந்தனர். விமானம் மேலே செல்லச் செல்ல, எண்கோண அமைப்பு காப்பாற்றப்பட்டு வந்தது. கடைசித் தளத்தில் அது மறைந்து, வட்டமான வடிவத்தை எட்டிவிட்டது. இம்மாதிரிப் புதுவிதமான விமான/சிற்ப வடிவங்களை அமைப்பதில் சோழர்கள் அதிகத் திறன் வாய்ந்தவர்கள். விமானத்தின் உயரம் ஏற ஏற, அதன் சுற்றளவு சிறுகச் சிறுக, விமானத்தின் அங்கங்களும் அளவில் குறுகிக்கொண்டே, தளத்திற்குத் தளம் உள்வாங்கியவாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக, ஒரு தளத்திற்கு மூன்று அடிப்படை உறுப்புகள் உண்டு: அதிட்டானம் (Base), சுவர், மற்றும் கூரைப்பகுதி. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் ஒரு தளம் என்று குறிக்கப்படுகின்றது. இந்த அடிப்படை அமைப்புக்ளை வைத்துக் கொண்டு, அவற்றை மேலும் மேலும் அழகுபடுத்திக்கொண்டே செல்வதில் சோழர்களுக்கு நிகர் சோழர்களேதான். அப்படிப் பார்த்தால், அதிட்டானம் என்ற பகுதியே பல்வேறு பகுதிகளாக மாறி, அமைக்கப்படும் வடிவம், அமைக்கின்ற சிற்பியின் திறன், அவர் வாழ்ந்த காலகட்டம், இவற்றிற்கேற்றாற்போல் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும். ஏன்? சில சமயம், ஒரு தளத்தோடு நில்லாமல், பல தளங்கள் அமைக்கும்பொழுது, அதிட்டானம் என்ற பகுதியே நீக்கப்படுவதும் உண்டு! இத்தனை நுணுக்கத்துடன் தளங்கள் அமைக்கப்பட்டதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று: அழகுணர்ச்சி என்று சொல்லப்படும் aesthetic sense. செய்யும் எதையும் இரசனையுடன் செய்தல். மற்றொன்றுவழிபாட்டுத்தலம் என்பதனால். இறைவன் குடிகொண்டுள்ள இடம், அவனைப் பார்க்க யிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்லும் இடம், மிக அழகானதாக, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொண்டு போகும் விதமாக அல்லவா இருக்க வேண்டும்?
1. நாகரா(Nagara) அமைப்பு (சதுர வடிவம்) தமிழ் நாட்டுக் கோயில்களில், நாகர அமைப்புடன் பரவலாகப் பல கோயில்களை காண முடியும். முழுக்க முழுக்க திராவிட அமைப்பில் விமானங்கள் கொண்ட கோயில்கள் நம்மிடையே இல்லை. முழுதாக வேசர அமைப்பில் விமானங்கள் கொண்ட கோயில்களும் இல்லை. தமிழகக் கோயில்களைப் பொறுத்த வரையில், விமான அமைப்பில் சிறந்து விளங்கியவர்கள் முதலாம் இராஜராஜ சோழர், மற்றும் இராஜேந்திர சோழர். தஞ்சைக் கோயிலை வடிவமைத்த இராஜராஜர், தனது விமானத்தை சதுரமாகவே எழுப்பினார். முடிவில், உச்சியில் இருந்த கலசத்தை மட்டும் திராவிட விமான அமைப்பில் எழுப்பினார். இராஜேந்திர சோழர் ஒரு படி மேலே போய், க.கொ.சோழபுரத்தின் விமானத்தில் மூன்று விதங்களைக் காட்டினார். க.கொ.சோழபுரத்தில் உள்ளது போல், மூன்று விதமான விமான அமைப்புகளை உள்ளடக்கிக் கொண்டு, வெளியிலிருந்து பார்த்தால் உட்புறமாக விமானம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று உணர்ந்து கொள்ளமுடியாதபடி நேர்த்தியாக அமைக்கப்பட்ட விமானம், இந்தியாவிலேயே வேறெங்கும் கிடையாதாம். எவ்வளவு உன்னதமான படைப்பு இது! |
| Dharma August 20, 2005 03:25 PM PDT Hey Pavithra, You have a magnetic power in documenting what you have seen/toured. Very very detailed and comprehensive. And, did I tell you that your writing style is too good. Dharma. | ||
| Leave a Comment: |