|
|
Thursday, March 04, 2004
Sudharsanam Research Institute
சுதர்சனம் ஆய்வு மையம்
For a picture version of this post, go here.
குடுமியான்மலையைப் பார்த்து முடித்து, வாசலில் பக்கம் பக்கமாக திரும்பி நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதும் (இதுவே கொஞ்சம் காமெடியாக இருந்தது. முதலில் யாராவது வாசற்புறம் பார்த்து நிற்கச் சொல்லி எடுப்பார்கள். அடுத்த நிமிடம் யாரேனும் இந்தப் பக்கம் என்று கத்த, எல்லோரும் about turn அடிப்போம். இப்படியே மாற்றி மாற்றி செய்தப்புறம்தான் குடுமியான்மலைக்கு விடை கொடுக்க முடிந்தது).
வேனில் ஏறி உட்கார்ந்த பிறகு, ஞானாலயா (இது தமிழ்நாட்டின் தனியார் நூலகங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றது)- பார்ப்பதற்குப் பதில் நேராக திரு.சுவாமிநாதனின் சுதர்சனம் ஆய்வு மையத்திற்குச் செல்லலாம் என்று முடிவாகியது.
புதுக்கோட்டையின் எல்லையில் அமைந்த சுதர்சனத்தை நாங்கள் அடைந்த பொழுது இரவு மணி எட்டு. சலவைக்கல் தளத்துடன் பள பள வென்று இருந்த சுதர்சனத்தின் மூன்றாவது மாடிக்குச் சென்ற பொழுது, கையும் காலும் ஓய்ந்து போய் வந்திருந்த எங்களுக்கு திரு.சுவாமிநாதனின் விரித்துப் போட்ட நாற்காலிகளும், குளிர்பானங்களும் அமிர்தமாக இருந்தன. திரு. சுவாமிநாதனே எங்களை புன்னகையுடன் வரவேற்றார்.
கமல் தன் handy-camஐ அறை வாயிலில் அமைக்க, ஒரு சிறிய அறிமுகத்திற்குப் பிறகு, அன்றைக்கு நாங்கள் பார்த்த இடங்களைப் பற்றிய விவாதம் ரம்பித்தது.
திரு.சுவாமிநாதன் தன்னுடைய ஆய்வு மையத்தின் உதவியாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். சுதர்சனத்தின் குறிக்கோள்களையும் (புதுக்கோட்டையின் சரித்திர முக்கியத்துவத்தை வெளிக் கொண்டு வருவது), தற்போது அவர்கள் செய்து வரும் projectகளையும் விவரித்தார். பழைமையான கல்வெட்டுக்கள் சிலவற்றைப் படியெடுத்து, தமிழில் அவற்றைக் கொடுத்து, அவற்றைப் படிப்பது எப்படி என்ற சிறு குறிப்புக்களுடன் தயார் செய்திருந்த அட்டைகளைக் காண்பித்தார். தனிப்பட்ட முறையில் அவர் தயார் செய்த ல்பங்கள் பலவற்றையும் காண்பித்தார்.
அவற்றையெல்லாம் பார்க்கையில் அவரது உழைப்பும், சரித்திர சம்பந்தமான விஷயங்களில் அவருக்கிருந்த ஆர்வமும், சுதர்சனம் ஆய்வு மையத்தின் வெற்றியும் நன்கு புரிந்தது.
அட, அதிகம் இல்லை- அவரவர் தங்கள் தங்கள் சொந்த ஊரைப் பற்றிய சரித்திரத்தையாவது தெரிந்து வைத்துக் கொண்டு, அதன் மகோன்னதத்தை அடுத்தவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். நான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவன். என் சொந்த ஊரின் சரித்திரத்தை நான் அல்லவா பெருமைப்படுத்த வேண்டும்?- இதுதான் அவரது கருத்து.
உண்மைதான் அல்லவா?
இறுதியாக, திரு.சுவாமிநாதனிடம் விடைபெற்றுக் கொண்டு, சுதர்சனத்திலிருந்து கிளம்பி நாங்கள் மறுபடியும் Prince Lodge வந்து சேர்ந்தோம். இரவு மணி பத்திற்கு கிடைத்த ஓட்டலில் கிடைத்த டிபனை முழுங்கிவிட்டு, அவரவர் அறைக்குச் சென்று முடங்கிவிட்டோம்.
Posted at 09:12 pm by pavithra
Thursday, February 19, 2004
குடுமியான்மலை
For a picture version of this post, go here.
அந்தி மாலை வேளைக்கு எப்பொழுதும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. எப்பேர்ப்பட்ட இடமும், சூரியன் மறையும் பொழுதில் மிக மிக அழகாகத் தோன்றும். அழகற்ற இடங்களுக்கே இப்படியென்றால், உயர்ந்த மலையைப் பின்னணியாகக் கொண்ட குடுமியான்மலை எப்படியிருக்கும்?
புதுக்கோட்டை-மணப்பாறை-கொடும்பாளூர்ச் சாலையில் 20 கி.மீ தொலைவில் இருக்கும் குடுமியான்மலைக்கு நாங்கள் வேனில் ஒரு குலுக்கலுடன் நின்ற பொழுது, மாலை மணி ஆறேகால்.
நிமிர்ந்து பார்த்தபொழுது, கோயிலின் கோபுரத்தைத் தாண்டி மலை உயர்ந்து நின்றது. மலைக்குப் பின்னால் இறங்கும் சூரியக் கிரணங்கள் ஒரே ஒரு நிமிடம் ஒளிபாய்ச்சி விட்டு, சட் டென்று மறைந்தன. வாயிலில் சற்றே தாமத்தித்துவிட்டு, உள்ளே நுழைந்தோம். அப்படி நுழைந்த பிறகுதான், குடுமியான்மலையின் சிறப்பு எப்படிப்பட்டது என்பது எங்களுக்குப் புரிந்தது.
முற்காலப் பாண்டியர்களின் காலத்தில்- அதாவது ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டில், சிறிய குடைவரைக் கோயிலாக மட்டுமே இருந்த குடுமியான்மலை, வருடங்கள் செல்லச் செல்ல, மெல்ல மெல்ல பெரிய கோயிலாக உருவெடுத்தது. குடுமியான்மலைக்கு அக்காலத்தில் வேறு பெயர்கள் இருந்திருக்கின்றன- திருநலக்குன்றம் என்பது ஒரு பெயர். திருநிலக்குன்றம் என்பது இன்னொரு பெயர். இரண்டாம் ராஜராஜசோழன் காலத்தில் ( 1146-1163) சிகாநல்லூர் என்ற பெயரும் வழக்கில் இருந்திருக்கிறது.
AD 1215- 1265 வருடங்களுக்குள், கோயில் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
கோயில் வளாகத்திற்குள் மொத்தம் மூன்று கோயில்கள் உள்ளன- மேலக்கோயில் அல்லது திருமேற்றளி என்பது ஒன்று, சிகாநாதர் அல்லது குடுமிநாதரின் கோயில் இரண்டாவது, சௌந்தரநாயகியம்மன் கோயில் மூன்றாவது. இவை தவிர, மலை மீது முருகப்பெருமானுக்கும் ஒரு கோவில் உண்டாம்.
உள்ளே மண்டபத்திற்குள் நுழைந்தவுடன், முதலில் கண்ணில் படுவது- ஒவ்வொரு தூணிலும் இழைக்கப்பட்டிருக்கும் ளுயரச் சிற்பங்கள். சிற்பங்கள் பலவிதம்- ஒவ்வொன்றும் ஒரு விதம். புன்னகையுடன் அருள்புரியும் கணபதி, இராவணன், ஆஞ்சநேயர்...அருகில் இருக்கும் மண்டபங்களின் தூண்களில் சில சாய்ந்து, இடிந்து போயிருக்கின்றன. உள்ளே நுழைவது ஆபத்து என்று போர்டே வைத்திருக்கிறார்கள்.
கருவறைக்குள்ளே குடுமிநாதர் (அல்லது சிகாகிரீஸ்வரர்), உச்சியில் குமிழ் போன்ற ஒன்றுடன் காட்சி தருகிறார் (சுயம்புலிங்கம் என்று சொல்கிறார்கள்).
குடுமிநாதர் சன்னதியின் வெளிப் பிரகாரத்தைத் தாண்டி வந்தால், சௌந்தரநாயகி அம்மனின் சன்னதிக்கு வரலாம். எளிமையாக, அதிக அலங்காரங்கள் அற்று விளங்குகிறது. ஒரு சிறிய கிணற்றுக்கு அருகில், அம்மன் சன்னதியின் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து இளைப்பாறினோம்.
பொதுவாகக் கோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கும்- யார் கட்டியது, எப்போது கட்டியது, யார் பராமரிப்பது, அதற்குரிய நிவந்த விவரங்கள் போன்ற விஷயங்களைக் குறிக்கும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது...
13 X 14 அளவுடைய, பல்லவ கிரந்த எழுத்துக்களால் ஆன, இசைக்கல்வெட்டு. சித்தம் நமச்சிவாய எனத் தொடங்கும் இந்தக் கல்வெட்டு, இசை இலக்கணத்தையும், யாழினையும் விவரிக்கிறது. கோயிலைத் தாண்டி, பூட்டியக் கதவுடன் இருக்கும் ஒரு பகுதியில், மலைச்சுவரில் வெட்டப்பட்டிருக்கிறது. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரம் என்ற நூலுக்கும், பதின்மூன்றாம் நூற்றாண்டின்பொழுது இயற்றப்பட்ட சங்கீத ரத்னாகரம் என்ற நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு, இந்திய இசையைப் பொறுத்தவரை, மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ஏழு ஸ்வரங்களைப் பற்றிய விவரங்களை ஏழு பகுதிகளாகக் கொடுக்கும் இந்தக் கல்வெட்டில், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் உருவாக்கியதாகச் சொல்லப்படும் ஸங்கீர்ண ஜாதியைப் பற்றிய விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. இதன் காரணமாக, ஸங்கீர்ண ஜாதிப் பிரகரணர் என்ற பட்டமும் அம்மன்னனுக்கு வழங்கப்பட்டதாகச் சொல்வார்கள்.
ஆவலுடன் நான், திரு.சீதாராமன், விக்கி, ஆகியோர் பூட்டிய கதவைத் த்’றந்த வழிகாட்டியின் பின்னால் நுழைய...அங்கே இடதுபக்கம் இருந்த மண்டபங்களைத் தாண்டி, நேர் எதிரே, பெரிய மண்டபம் ஒன்றின் கூரையில், சுவர் முழுதும் பரவியிருந்த இசைக் கல்வெட்டுக்களை லேசாக மறைத்தபடி மெகா சைஸில் நான்கு தேனடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றைச் சுற்றி தேனீக்கள் விர்ரென்று பறந்துகொண்டிருந்தன.
காலைலியே ஆபீஸரைக் கொட்டிடுச்சுங்க... என்று எங்கள் வழிகாட்டி சொல்லும் பொழுதே, ஒரு தேனீ ஆசையுடன் விக்கியைத் துரத்த ரம்பிக்க - அவ்வளவுதான், ஓட்டம் பிடித்தோம். (திரு. சேஷாத்ரிதான் தன்னுடைய புத்தகத்தின் உதவியுடன் விக்கியின் கூந்தலை விட்டுப் பிரிய மனமில்லாத அந்தத் தேனீயை விடாப்பிடியாகப் பிடுங்கியெடுத்தார். :-)).
பூட்டிய வளாகத்திற்கு வெளியிலிருந்து பார்த்தால், மலைச்சுவரிலே சிறிய புள்ளிகளாக ரிஷபத்தின் மேல் சிவ பெருமானும், பார்வதி தேவியும், கைலாயவாசிகளும் தெரிகின்றனர். அவை, அக்காலச் சிற்பிகளின் கைத் திறனை அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றன.
குடுமியான்மலைக் கோயிலின் வாயிலில் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, கோயிலை இறுதியாக கண்களில் நிரப்பிக் கொண்டு, கிளம்பினோம்.
Posted at 11:01 pm by pavithra
Tuesday, February 10, 2004
கொடும்பாளூர்
For a picture version of this post, go here.
பொன்னியின் செல்வனின் இளவரசி வானதியைத் தந்த கொடும்பாளுர். வீரர் பூதி விக்கிரமக் கேசரியை அறிமுகப்படுத்திய கொடும்பாளுர். கல்கியின் வர்ணனைப்படி பொட்டல்காட்டு பிராந்தியமான, சோழநாட்டின் அபரிமிதமான நீர்வளமற்ற கொடும்பாளூர். எப்படித்தான் இருக்கும் இந்த ஊர்? என்ற பார்க்கத் தூண்டிய கொடும்பாளூர்.
அப்படிப்பட்ட கொடும்பாளூரின் பிரசித்தி பெற்ற மூவர் கோயிலுக்கு(புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ.தொலைவு), நாங்கள் வந்து சேர்ந்த பொழுது மாலை மணி ஐந்து. வெயிலின் சூடு தணிய ரம்பித்திருந்தது. மெல்லிய காற்று எங்களைச் சுற்றிக் கொண்டு, சாலை மணலை வருடிச் சென்றது.
கல்கியின் வர்ணனை சரியாகத்தான் இருக்கிறது. கருவேலமரங்களும், வறண்ட நிலமுமாகத்தான் இருக்கிறது இளவரசி வானதியின் பிறந்த வீடு. அங்கங்கே வயல்வெளிகள் மனதுக்கு இதமளிக்கின்றன.
சாலை வளைந்து திரும்பியதும், இரு சிறிய கோயில்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. சுற்றிலும் மண்டபங்கள் இருந்ததற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
கொடும்பாளூரின் பல கோயில்களுள், மூவர் கோயிலும், முசுகுந்தேஸ்வரர் கோயிலும்தான், அந்தப் பிரதேசத்தின் சிற்ப வேலைப்பாட்டிற்குப் பெயர் போனதாகக் கருதப்படுகின்றன.
ஒரு காலத்தில், மூவர் கோயில் கண்ணைப் பறிக்கும் அழகுடன், வித்தியாசமான சிற்பக் களஞ்சியமாக விளங்கியிருக்க வேண்டும். இப்பொழுதோ, பெயருக்கேற்ப இருக்க வேண்டிய மூன்று கோயில்களுக்குப் பதில், இரு கோயில்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. மூன்றாவது கோயிலின் அடித்தளம் மட்டுமே பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.
சோழர்களின் காலத்தில் கொடும்பாளூர் பிரசித்தி பெற்று விளங்கியது இருக்கட்டும்- சிலப்பதிகாரத்தின் காலத்திலிருந்தே இது கொடும்பை என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்திருக்கிறது. இருக்குவேளிர் குலத்தின் முக்கிய நகரமாக இருந்த இது, பழங்காலத்தில் இருக்குவேளூர் என்ற பெயர் கொண்டிருந்திருக்கிறது. கோனாட்டுக் கொடிநகரம் என்று பெரியபுராணத்திலும் பெயர் பெற்றிருக்கிறது.
றிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை இருக்குவேளிர்களின் திக்கத்திற்குள் இருந்த கொடும்பாளூர், திரூப்புறம்பியத்தில் சோழர்கள் பல்லவர்களையும் பாண்டியர்களையும் முறியடித்த பிறகு (880 AD) சோழர்கள் வசம் வந்திருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டு வரை சோழர்களின் பராமரிப்பில் இருந்த பிறகு, முஸ்லிம் படையெடுப்பில் நகரம் அழிந்து போயிருக்கலாம் என்று சொல்கிறார்கள். வாணிபத்தில் கொழித்து, நானா தேசத்து ஐந்நூற்றுவரின் திக்கத்தில் செழித்திருந்த இந்த நகரத்தில் இப்பொழுது மிஞ்சியிருப்பவை சில கோயில்கள் மட்டுமே.
மூவர் கோயிலைக் கட்டியது பெருவீரனான பூதி விக்கிரம கேசரி. கல்வெட்டுக்களின் படி பார்த்தால், தன் பெயரிலும், தன் இரு மனைவியரான நங்கை கற்றளி பிராட்டி மற்றும் வரகுணாவின் பெயரிலும் (பெயர்கள் அட்டகாசமாக இல்லை?) கட்டியிருந்திருக்கிறார் (மனைவியரின் மேல் எவ்வளவு பாசமிருந்தால் இப்படிச் செய்யத் தோன்றும்?). கல்வெட்டுக்கள் இப்படி சொன்னாலும், மூவர் கோயில் என்ற பெயருக்கு வித விதமான காரணங்கள் உலவுகின்றன. அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் மூவரின் பெயரால் எழுப்பப்பட்டது என்கிறார்கள் சிலர். சிவன், விஷ்ணு, பிரம்மா மூவருக்காகவும் எழுப்பப்பட்டது என்பது இன்னொரு கதை.
திரு. சேஷாத்ரி, தன்னுடன் எடுத்து வந்திருந்த புத்தகத்திலிருந்து, கொடும்பாளூர் கோயிலைப் பற்றி படித்துச் சொன்னதும்(அநேகமாக, நாங்கள் பார்த்த அனைத்துக் கோயில்களுக்கும் அவர் இந்த மாதிரி குறிப்புகள் படித்துக் காட்டினார். அவை மிக உதவியாக இருந்தன), கோயிலைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.
மூவர் கோயிலில் பல்லவர் பாணியின் தாக்கம் நிறைய இருப்பதாகத் தெரிகிறது- இருக்குவேளிர்களுக்கும், பல்லவர்களூக்குக் கீழே சிற்றரசர்களாக இருந்த முத்தரையர்களுக்கும், பெண் எடுத்துப் பெண் கொடுக்கும் சொந்தம் இருந்ததால், பல்லவச் சிற்பக் கலையின் தாக்கம் தெரிகிறது என்றும் சொல்கிறார்கள்.
ASIயால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிகாட்டி, முதலில் ஸ்பெஸ்டாஸ் கூரையுடன் இருந்த சிறிய கட்டிடம் ஒன்றிற்குள் எங்களை அடைத்தார். உள்ளே உடைந்தும் உடையாமலும், சிற்பங்கள், சிற்பங்கள், சிற்பங்கள். கையை மடித்து அருள்புரியும் விஷ்ணு பகவான், முகத்திற்கு ஒப்பனை செய்து கொள்ளும் குமரியிலிருந்து, ஒயிலாகப் போஸ் கொடுக்கும் துவாரபாலகர் வரை, அவசரமாக அடுக்கப்பட்ட கொலு வரிசை போல் வீற்றிருந்தார்கள். மூவர் கோயிலைச் சுற்றிக் கண்டெடுக்கப்பட்ட சிலைகளாம் அவை. பாதுகாப்பிற்காக இங்கே வைத்திருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது- இந்த நிலையிலும் அவற்றின் அழகு துளியும் குறையவில்லை. கோயில் வளாகத்தில் இடம் பெற்றிருந்த பொழுது இன்னும் எவ்வளவு அழகாகத்தான் இருந்திருக்கும்?
வெளியிலே, சுந்தரம் சார் அங்கே குழுமியிருந்த கிராமத்துப் பொடிசுகளை கிண்டலடித்துக் கொண்டிருக்க (சினிமாவுக்கு வர்றியா, ஜோதிகா மாதிரி க்கி விடறேன்- பொடிசுகளிடமிருந்து ஒரே சிரிப்பு)- நாங்கள் ASIயின் புண்ணியத்தில் செதுக்கப் பட்டிருந்த புல்வெளியைத் தாண்டி கோயில்களை நெருங்கினோம்.
முதற்கோயிலுக்குள் ஒரு சிவலிங்கம் தனித்து, வுடையார் துணையில்லாமல் நிற்கிறது. அண்ணாந்து பார்த்தால், விமானத்தின் உட்புறம் மே...லே செல்கிறது. இரண்டாவது கோயிலுக்குள் தெய்வ உருவம் எதுவும் இல்லை. பூட்டப் பட்டு இருக்கிறது.
கோயில்களின் மேன்மாடங்களை அபூர்வச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன- கங்காதரர், பிட்சாடனர், கையில் வீணையை ஒயிலாக வைத்துக்கொண்டு, புரிபடாத புன்னகை ஒன்றைச் சிந்தும் வீணாதரமூர்த்தி - உமையவள் பாதியும், சிவபெருமான் பாதியுமாக நிற்கும் அர்த்தநாரீஸ்வரர், ரிஷபாரூடராகக் காட்சியளிக்கும் சிவ பெருமான்.
காலாரிமூர்த்தியாக, கால்கள் அசுரனைத் துவைத்தாலும், முகத்தில் புன்னகையுடன் நர்த்தனமாடும் சிவ பெருமான். இன்னுமொரு மாடத்தில், பார்வதி தேவி ஒரு புறம் திரும்பியிருக்க, கெஞ்சலுடன் அழைக்கும் சிவபெருமான். அதற்குக் கீழ் மாடத்தில், சண்டைச் சச்சரவுகள் தீர்ந்த நிலையில் முகத்தில் மந்தகாசத்துடன் நிற்கும் உமையவளும் ஈஸ்வரனும். அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் பயபக்தியுடன் கவரி வீசும் நங்கை.
எங்கெங்கு காணினும் சிற்பங்களடா!
ஒரு ஓரத்தில் கிணறு ஒன்று இருக்க, அதற்கு அருகில் தண்ணீரின் விளிம்பு வரைச் செல்லும் படிகள் இருக்கின்றன. மேலேயிருந்து ஒருவர் பார்க்க, நாங்கள் படிகளில் (செத்த நண்டுகளை ஜாக்கிரதையாகத் தாண்டிக் கொண்டு) இறங்கி தலையை நீட்ட, புகைப்படங்கள் சுட்டுத் தள்ளப்பட்டன.
சாயங்கால வெய்யிலில், தென்னந்தோப்பின் பின்னணியில், இடிந்து தரை மட்டமாகியிருந்த முன் மண்டபங்களைத் தாண்டிக் கொண்டு, இறுதியாக மூவர் கோயிலை ஒரு நோட்டம் விட்டோம். அழகான கோயில். அற்புதமான சிற்பங்கள். சோழர் காலத்தில் இன்னும் எப்படித்தான் இருந்திருக்கும் என்னும் கற்பனை மனதில் எழுந்தது.
அந்த நினைவுகளுடனேயே வேனை நோக்கி நடந்தோம்.
Posted at 04:59 am by pavithra
Tuesday, January 20, 2004
சித்தன்னவாசல்:
For a picture version of this post, go here.
நார்த்தாமலையைப் பார்ப்பதற்காக மிக ஆவலுடன் நாங்கள் Rockfort Expressஇலிருந்து நேரே குதித்துவிட்டிருந்ததால், கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டால் நன்றாகத்தான் இருக்கும் என்று எல்லோருக்குமே தோன்றியது. எப்படியும் புதுக்கோட்டை சென்று ஓட்டலில் எங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டியிருந்ததால், உடனடியாகக் கிளம்பிவிட்டோம். சாலையோரம் நின்று எங்களை வேடிக்கை பார்த்த மயில்களை ரசித்து,(புதுக்கோட்டைப் பிரதேசத்தில் எத்தனை மயில்கள்!) வழியெல்லாம் நின்ற சிறுவர்களுக்கு கையாட்டிவிட்டு, பதினைந்து நிமிடம் கழித்து Prince Lodgeஇன் வாயிலில் நின்றோம்.
சரியா இருபது நிமிஷத்துக்குள்ள வரணும் என்று கமல் உத்தரவு பிறப்பிக்க, உண்மையில் நாங்கள் கிளம்பும் பொழுது மணி பதினொன்றரை. சூரிய பகவானின் புண்ணியத்தில் வெயில் நன்றாக ஏறிவிட்டது. வழியில் திரு. சுவாமிநாதனின் சுதர்சனம் என்கிற ஆய்வு மையத்தில் இறங்கி, அவர் எங்களுக்காகத் தயார் செய்து வைத்திருந்த சரித்திரக் குறிப்புகளை வாங்கிக் கொண்டு, புதுக்கோட்டை-அன்னவாசல்-விராலிமலை சாலையில், 16 கி.மீ தொலைவிலிருந்த சித்தன்னவாசலை நோக்கிப் பயணமானோம்.
சித்தன்னவாசலும் பாறைப் பிரதேசம்தான். அன்னவாசல் செல்லும் சாலையில் வலதுபுறம் திரும்பினால், 70 மீட்டர் உயரத்தில் முதலில் ஏழடிப்பட்டம் எங்களை வரவேற்றது. சிறிய மலைப் பகுதியான ஏழடிப்பட்டம்தான், அன்றைய சமணர்களின் இருப்பிடமாக இருந்தது. கி.மு. 3ம் நூற்றாண்டில் சமண முனிவர்கள் பயன்படுத்திய கல் படுக்கைகள் இன்று வரையில் அங்கு இருக்கின்றன- அவற்றைப் பற்றிய விவரங்கள் அடங்கிய கல்வெட்டுக்களும் இருக்கின்றன் (துரதிர்ஷ்டவசமாக, ஏழடிப்பட்டத்தை நாங்கள் பார்க்கவில்லை). நாங்கள் நேராகப் படையெடுத்தது, ஏழடிப்பட்டத்திலிருந்து அரை கி.மீ தொலைவில் இருந்த சமணர் குகைகளுக்கு.
சிவகாமியின் சபதத்தில், ஆயனச் சிற்பியாருக்கும், சமண முனிவர் ஒருவருக்கும் நடப்பதாக ஒரு ஓவியப்போட்டியை கல்கி வர்ணித்திருந்தார் அல்லவா? அந்தப் போட்டி நடந்ததாகச் சொல்லப்பட்ட இடம் இந்தக் குகைதான் (உண்மையில் அந்தப் போட்டிச் சம்பவம் கல்கியின் அபாரக் கற்பனை நிகழ்ச்சிகளில் ஒன்றுJ ).
இந்தச் சமணர் குகையைப் பார்க்கும் பேறு எங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்ததா என்றால்... அதுதான் இல்லை. அதற்காக நாங்கள் ஏறக்குறைய ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஏன்? எங்களுக்கு விஷயத்தை விளக்கிச் சொல்லவேண்டிய வழிகாட்டி (Guide) வந்து சேர்ந்தபாடில்லை. எஞ்சிய பொழுதை வெட்டியாகக் கழிக்காமல், எங்களைப் போலவே அங்கு காற்று வாங்கிக் கொண்டிருந்த ஒரு குழு ஆரவாரத்துடன் கிரிக்கெட் விளையாடியதைக் கண்டு ரசித்தோம். நடுவில் சில புகைப்படங்களையும் சுட்டுத் தள்ளியதன் விளவு- எல்லோருக்கும் அகோர தாகம். எங்களுக்கு வசதியாக அங்கே ஒரு லுங்கிப் பேர்வழி அருண் பெப்ஸி என்று ஒரு சிறிய பெட்டியில் அடைத்து விற்றுக் கொண்டிருந்தார். பெப்ஸியை எப்படி பெட்டிக்குள் வைத்து விற்க முடியும்? என்று நாங்கள் குழம்பிக் கொண்டிருக்க, பெட்டியைத் திறந்தால், சிறிய ப்ளாஸ்டிக் பைகளில் உறைந்துபோன Orange Juice! விடுவோமா என்ன? ஒண்ணு போதும், என்றெல்லாம் அலட்டிவிட்டு, ஆளுக்கு குறைந்தது மூன்று குச்சிகளையாவது முழுங்கிவிட்டு (லுங்கி ஆசாமியின் பெட்டியை முக்கால் காலி செய்துவிட்டு) திருப்தியடைந்தோம். அதற்குள் கைடும் வந்துவிடவே, மலையேறும் படலம் ஆரம்பித்தது.
நார்த்தாமலையைப் போல், சித்தன்னவாசலும், சிறிய மலைதான். அங்கங்கே சிறிய புதர்கள்...மலைச்சரிவைத் தாண்டி பச்சைப் பசேல் வயல் வெளிகள். ஆளரவமற்ற தனிமை. இப்பொழுது வருடம் 642 AD என்று சொன்னால் நம்பக் கூடிய தனிமை. சில விஷயங்கள் மாறுவதில்லை போலும்.
மலைச்சுவரிலேயே வெட்டப்பட்ட படிகள் மேலேற, தொலைவில் வலை போட்ட கதவுகள் எங்களை வரவேற்றன. உள்ளே நுழைந்தால்...சில்லென்ற கல்தரையுடன் சமணர் குகை. எங்கள் தலைக்குமேல் அழிந்தும் அழியாததுமாக வண்ண ஓவியங்கள். வெளி மண்டபத்தில் இடதுபக்கமும் வலப் பக்கமும் இருபத்துமூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவனாதரும், மற்றுமொரு ஜைன ஆச்சார்யரும் நிஷ்டையில் அமர்ந்திருக்கின்றனர். உள்ளே ஒரு சிறிய சன்னதி- அதில் ஒரு சுவரில் மூன்று ஜைன ஆச்சார்யர்கள் ஆழந்த தவத்தில் மலைச்சுவரில் குடையப்பட்டு காட்சியளித்தனர்.
இந்தக் குகைக்கு ஐவர் கோயில் என்ற பெயர் உண்டு. 815AD- 862 AD வருடங்களில் ஆட்சி செய்த ஸ்ரீமாற ஸ்ரீவல்லப பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில், இளம் கௌதமன் என்னும் சமண முனிவரால் முன் மண்டபம் புதுப்பிக்கப்பட்டதாக 9ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் சொல்கின்றன.
வெளி மண்டபத்தில் -அதாவது அர்த்த மண்டபத்தில்- தலையை மேலே தூக்கிப் பார்த்தால்...அடேங்கப்பா!
< | | |