|
|
Sunday, March 21, 2004
Day 2 (Sunday, June 8, 2003)
திருமயம்
குறிப்பு: இந்தக் கட்டுரை 'திசைகள்' இணைய இதழில் வெளிவந்துள்ளது. For a picture version of this post, go here.
இரண்டாம் நாள் காலை ஏழரை மணிக்கு, காலை உணவை முடித்துக் கொண்டு திருமயம் நோக்கிப் படையெடுத்தோம்.
‘படையெடுத்த’தற்குக் காரணம் இருக்கிறது- திருமயம் என்பது கோயில் மட்டுமல்ல- ஒரு கோட்டையும் கூட. திருச்சிராப்பள்ளி- இராமேஸ்வரம் சாலையில் (NH-210), புதுக்கோட்டைக்குத் தெற்கே 20 கி.மீ தொலைவில் இருக்கும் திருமயத்தை, சாலையிலிருந்து பார்த்தாலே, மலையின் உச்சியில் தெரியும் கோட்டை காட்டிக் கொடுத்து விடும். ரோட்டிலிருந்து பிரியும் மதில்சுவர்களை ஒட்டி வந்தால், ஒரு சந்து திரும்பியவுடன், திருமயம் கோட்டையின் அழகு ‘பளி’ச்சென்று கண்ணில் விரியும்.
முந்தைய நாள் எரித்த வெயில் இப்பொழுது காணாமல் போயிருந்தது. மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்க, குளிர்ச்சியான காலை வேளையில் நாங்கள் கோட்டை வாயிலில் இறங்கினோம். ஒன்பது மணிக்குத்தான் ‘கோட்டைக் கதவுகளை’ (Gate ) ASIக்காரர்கள் திறப்பார்கள் என்று தெரிய வரவே, கோட்டையின் முன்பக்கமான மலைச்சுவரை ஒட்டி நடந்தோம். மலைச்சுவர் சரிவாக மேலேற- ஏறிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் வராது?
மலைச்சுவர் முடியும் இடத்தில், கறுப்பாக ஒரு பொந்து போல் ஏதோ கண்ணுக்குப் புலப்பட்டதும், அது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் தலை தூக்கியது. அவசரமாக மேலேறிய பொழுது, சிறிய குகைதான் அது என்று புரிய, மிச்சப் பொழுதை அங்கேயே பாறைகளின் மேல் கழித்தோம். அங்கிருந்து பார்த்தால், மலையை ஒட்டியிருக்கும் பச்சைப் பசேலென்ற குளமும், சற்று தூரத்தில், சாலையை ஒட்டி கண்ணாடியைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்த இன்னொரு குளமும் தெரிந்தன. காலை வேளையின் ‘ஜிலி ஜிலு’ப்பை ரசித்தவாறு அங்கேயே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, மலைச்சரிவுக்கு அருகில் பத்தான கோணத்தில் சாய்ந்து நின்ற பாறை ஒன்றின் மீது ‘ஏறியே தீருவேன்’ என்று அடம் பிடித்த நண்பர்களையும் இழுத்துக் கொண்டு, மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தோம்.
‘கோட்டைக் கதவுகள்’ திறக்கும் நேரத்திற்குள் கோயிலைப் பார்த்துவிடலாம் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட, ‘பைரவர் சன்னதி’யைப் பார்த்துவிட்டு, வேனை நோக்கி நடந்தோம். கோட்டைக்குச் சற்றுத் தள்ளி, மலையைச் சுற்றிக் கொண்டு, சிவன் மற்றும் விஷ்ணு கோயில்களுக்கு வந்து சேர்ந்தோம்.
திருமயம் சிவன் கோயிலின் ஓவியங்களையும், கல்வெட்டுக்களையும் வைத்து, அது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். பிற்காலத்தில், திருமயம் சோழர்கள் கைவசம் வந்து விட்டது. 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் ஹொய்சளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவிட்டு, பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பாண்டியர்களின் கைக்கு வந்திருக்கிறது. இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் ஜடாவர்மன் வீர பாண்டியன் ஆகியோரின் காலத்திலிருந்து கல்வெட்டுக்களும் காணக் கிடைக்கின்றன.
16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில், ராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சியில் இருந்த திருமயத்தைப் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் சொல்கிறார்கள்- 1799ம் வருடத்தின் பொழுது, பாஞ்சாலங்குறிச்சியின் வீர பாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும் இங்கேதான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனராம்/மறைந்திருந்தனராம். எவ்வளவு தூரம் இது உண்மை என்றுதான் தெரியவில்லை. கொசுறாக இன்னொரு தகவல்: சுதந்திரப் போராட்ட வீரர் திரு. சத்தியமூர்த்தி பிறந்த இடமும் திருமயம்தான் (1887 AD).
திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. திருவரங்கத்தின் கோயிலை விட இது பழைமையானது என்றும், அதனாலேயே இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள். விஷ்ணு கோயிலுக்குள்ளேயே இரு சன்னதிகள் இருக்கின்றன- வேலைப்பாடமைந்த கற்றளியான சத்தியமூர்த்தி கோயில் ஒன்று. மலைச்சுவரிலேயே குடையப்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று. இதில் கோயில் கொண்டிருப்பவர் ‘யோக சயன மூர்த்தி’யான ’திருமெய்யர்’. திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள், ‘மது கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமி தேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பாற்றுகிறார் என்கிறது தல வரலாறு.
“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே.”
என்று திருமங்கையாழ்வார், ‘திருமெய்யரி’ன் புகழ் பாடியிருக்கிறார்.
‘திருமெய்யரின்’ சந்நதியிலிருந்து வலது பக்கம் சென்று, கோயிலின் மேல் கவிந்திருக்கும் மலைச்சுவரின் அடியில் செல்லும் இடைவெளியில் நுழைந்து வெளிவந்தால், சத்யமூர்த்தியின் ஆலயத்திற்கு வந்துவிடலாம்.
திருமயத்தில் மொத்தம் பத்தொன்பது கல்வெட்டுக்கள் இருக்கின்றன- சிவன் கோயிலில் ஐந்து, விஷ்ணு கோயிலில் பதிநான்கு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச்(அல்லது ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச்) சேர்ந்த சில கல்வெட்டுக்கள், சத்யமூர்த்திப் பெருமாளின் சன்னதியின் மேற்கு பிராகாரத்தில் காணப்படுகின்றன. முத்தரையர் தலைவரான சாத்தன் மாறன் என்பவரின் தாயார், குடைவரைக் கோயிலைத் திருப்பணி செய்து, நிதியும் கொடுத்துதவினார் என்கின்றன இந்தக் கல்வெட்டுக்கள். 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுகளும், 15, 16ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த விஜயநகர அரசின் கல்வெட்டுக்களும் காணக்கிடைக்கின்றன.
சிவன் கோயில் மண்டபத்தின் வலப்புறம் இருக்கும் சுவற்றில், ‘பரிவாதினி-தா’ என்று ஆரம்பமாகும் இசைக்கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டுக்கள், கிரந்த எழுத்துக்களில் வெட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் கல்வெட்டைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தி: கல்வெட்டின் மேல் பகுதியில் 13ம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கடியில் இசைக்கல்வெட்டு உருத்தெரியாமல் அழிந்திருக்கிறது. 13 ம் நூற்றாண்டில் அப்படியென்ன நடந்தது?
வேறொன்றுமில்லை- சிவன் மற்றும் விஷ்ணுக் கோயில்களின் நிர்வாகத்தினருக்குள் எற்பட்ட சச்சரவு, ஹொய்சள சேனாதிபதி அப்பண்ண தண்டநாயகரால் தீர்த்து வைக்கப்பட்டது. அந்தச் செய்தியைத் தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். (ஆழ்வார்க்கடியானும் வீரசைவரும் அடித்துக் கொண்டது ந்¢னைவுக்கு வரவில்லை?)
கோயிலுக்கு கிழக்கே, எண்கோண வடிவில், (பாசியின் மிகுதியால்) பச்சை நிறத்தில் ‘பள பள’க்கும் நீருடன், கச்சிதமாக அமைந்திருக்கும் ‘சத்ய புஷ்கரணி’யை ரசித்துவிட்டு, கோயிலிலிருந்து கிளம்பினோம். (‘சத்யகிரீஸ்வரர்’ கோயில் கொண்டிருக்கும் சிவன் கோயிலை நாங்கள் பார்க்கவில்லை. )
‘ஊமையன் கோட்டை’ என்று அந்தப் பகுதியில் அழைக்கப்படும் கோட்டையை நாங்கள் நெருங்கிய பொழுது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. கோட்டை வாயிலைத்தாண்டி நாங்கள் உள்ளே பிரவேசித்தோம். பாறையிலேயே குடையப்பட்ட படிகளைக் கடந்து மேலே சென்றால், ஒரு சிறிய கதவு தென்படுகிறது. கதவின் மறுபக்கம் ஒரு பெரிய லமரம். வலது பக்கம் செல்லும் சிறிய ஒற்றையடிப் பாதை. நேர் எதிரே மேலும் படிகள்.
ஆலமரத்தின் விழுதுகளைப் பார்த்தால் தொங்காமல் விடலாமா என்ன? மரம் ஏறுவதிலிருந்து விழுதில் தொங்குவது வரை எல்லாம் ஒரு புறம் நடக்க, மறுபுறம் ஒற்றையடிப்பாதையின் முடிவு என்ன என்ற விசாரணை நடந்தது. பாதையை நூல் பிடிப்பதுபோல் பிடித்துக் கொண்டே சென்றால், அது இன்னொரு பாறையில் சென்று முடிவடைந்தது. இந்தப் பாறையின் அடியில் இருக்கும் படிகளில் இறங்கினால், ஒரு சிறிய ‘மறைந்த மண்டபம்‘ (நிஜமாகத்தான்!) இருந்தது. வேப்பமரங்கள் கவிந்திருந்த மண்டபத்தின் கூரைமேல் ஏறிப் பார்த்தால்...நேர் எதிரே, செங்குத்தாக ஏறிய மலைச்சுவரில்- ஒரு சிறிய சன்னதிக்குள் சிவலிங்கம்.
இன்னும் மேலே ஏறியவுடன், மலையின் உச்சியில் சென்று கோட்டை முடிவடைந்தது. காற்று ளைத் தூக்கிக் கொண்டு செல்ல, சிலர் கோட்டைச் சுவர் ஓரங்களுக்குச் சென்றனர். மற்றவர்கள் உச்சியில் வைக்கப்பட்டிருந்த பீரங்கியை நோக்கி நடந்தனர். கோட்டையின் அடிவாரத்தில் பரந்து விரிந்த வயல்வெளிகளையும், கிராமப்புறங்களையும், வளைந்து நெளியும் சாலைகளையும் பார்த்து ரசித்தோம். பீரங்கியின் மேல் உட்கார்ந்து 'போஸ்' கொடுப்பதிலிருந்து, கோட்டை சுவற்றிலிருந்து கீஈஈஈழே தெரிந்த குளம் வரையில் எட்டிப்பார்ப்பது வரையில் எல்லாம் செய்த பிறகு, அங்கிருந்து கிளம்பலாம் என்று முடிவாகியது.
மலையிலிருந்து இறங்கி வந்து, ஆளுக்கு இரண்டு மூன்று இளநீரை கபளீகரம் செய்த பிறகு ஒரு மாதிரி தாகம் தணிய, பயணத்தின் அடுத்த கட்டத்திற்குச் சென்றோம்.
Posted at 10:49 pm by pavithra
Thursday, March 04, 2004
Sudharsanam Research Institute
‘சுதர்சனம்’ ஆய்வு மையம்
For a picture version of this post, go here.
குடுமியான்மலையைப் பார்த்து முடித்து, வாசலில் பக்கம் பக்கமாக திரும்பி நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதும் (இதுவே கொஞ்சம் காமெடியாக இருந்தது. முதலில் யாராவது வாசற்புறம் பார்த்து நிற்கச் சொல்லி எடுப்பார்கள். அடுத்த நிமிடம் யாரேனும் ’இந்தப் பக்கம்’ என்று கத்த, எல்லோரும் about turn அடிப்போம். இப்படியே மாற்றி மாற்றி செய்தப்புறம்தான் குடுமியான்மலைக்கு விடை கொடுக்க முடிந்தது).
வேனில் ஏறி உட்கார்ந்த பிறகு, ஞானாலயா (இது தமிழ்நாட்டின் தனியார் நூலகங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றது)- பார்ப்பதற்குப் பதில் நேராக திரு.சுவாமிநாதனின் ‘சுதர்சனம்’ ஆய்வு மையத்திற்குச் செல்லலாம் என்று முடிவாகியது.
புதுக்கோட்டையின் எல்லையில் அமைந்த ‘சுதர்சன’த்தை நாங்கள் அடைந்த பொழுது இரவு மணி எட்டு. சலவைக்கல் தளத்துடன் ‘பள பள’ வென்று இருந்த ‘சுதர்சன’த்தின் மூன்றாவது மாடிக்குச் சென்ற பொழுது, கையும் காலும் ஓய்ந்து போய் வந்திருந்த எங்களுக்கு திரு.சுவாமிநாதனின் விரித்துப் போட்ட நாற்காலிகளும், குளிர்பானங்களும் அமிர்தமாக இருந்தன. திரு. சுவாமிநாதனே எங்களை புன்னகையுடன் வரவேற்றார்.
கமல் தன் handy-camஐ அறை வாயிலில் அமைக்க, ஒரு சிறிய அறிமுகத்திற்குப் பிறகு, அன்றைக்கு நாங்கள் பார்த்த இடங்களைப் பற்றிய விவாதம் ரம்பித்தது.
திரு.சுவாமிநாதன் தன்னுடைய ஆய்வு மையத்தின் உதவியாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். ‘சுதர்சன’த்தின் குறிக்கோள்களையும் (புதுக்கோட்டையின் சரித்திர முக்கியத்துவத்தை வெளிக் கொண்டு வருவது), தற்போது அவர்கள் செய்து வரும் projectகளையும் விவரித்தார். பழைமையான கல்வெட்டுக்கள் சிலவற்றைப் படியெடுத்து, தமிழில் அவற்றைக் கொடுத்து, அவற்றைப் படிப்பது எப்படி என்ற சிறு குறிப்புக்களுடன் தயார் செய்திருந்த அட்டைகளைக் காண்பித்தார். தனிப்பட்ட முறையில் அவர் தயார் செய்த ல்பங்கள் பலவற்றையும் காண்பித்தார்.
அவற்றையெல்லாம் பார்க்கையில் அவரது உழைப்பும், சரித்திர சம்பந்தமான விஷயங்களில் அவருக்கிருந்த ஆர்வமும், ‘சுதர்சனம்’ ஆய்வு மையத்தின் வெற்றியும் நன்கு புரிந்தது.
‘அட, அதிகம் இல்லை- அவரவர் தங்கள் தங்கள் சொந்த ஊரைப் பற்றிய சரித்திரத்தையாவது தெரிந்து வைத்துக் கொண்டு, அதன் மகோன்னதத்தை அடுத்தவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். நான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவன். என் சொந்த ஊரின் சரித்திரத்தை நான் அல்லவா பெருமைப்படுத்த வேண்டும்?’- இதுதான் அவரது கருத்து.
உண்மைதான் அல்லவா?
இறுதியாக, திரு.சுவாமிநாதனிடம் விடைபெற்றுக் கொண்டு, ‘சுதர்சன’த்திலிருந்து கிளம்பி நாங்கள் மறுபடியும் Prince Lodge வந்து சேர்ந்தோம். இரவு மணி பத்திற்கு கிடைத்த ஓட்டலில் கிடைத்த டிபனை முழுங்கிவிட்டு, அவரவர் அறைக்குச் சென்று முடங்கிவிட்டோம்.
Posted at 09:12 pm by pavithra
Thursday, February 19, 2004
குடுமியான்மலை
For a picture version of this post, go here.
அந்தி மாலை வேளைக்கு எப்பொழுதும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. எப்பேர்ப்பட்ட இடமும், சூரியன் மறையும் பொழுதில் மிக மிக அழகாகத் தோன்றும். அழகற்ற இடங்களுக்கே இப்படியென்றால், உயர்ந்த மலையைப் பின்னணியாகக் கொண்ட குடுமியான்மலை எப்படியிருக்கும்?
புதுக்கோட்டை-மணப்பாறை-கொடும்பாளூர்ச் சாலையில் 20 கி.மீ தொலைவில் இருக்கும் குடுமியான்மலைக்கு நாங்கள் வேனில் ஒரு குலுக்கலுடன் நின்ற பொழுது, மாலை மணி ஆறேகால்.
நிமிர்ந்து பார்த்தபொழுது, கோயிலின் கோபுரத்தைத் தாண்டி மலை உயர்ந்து நின்றது. மலைக்குப் பின்னால் இறங்கும் சூரியக் கிரணங்கள் ஒரே ஒரு நிமிடம் ஒளிபாய்ச்சி விட்டு, ‘சட்’ டென்று மறைந்தன. வாயிலில் சற்றே தாமத்தித்துவிட்டு, உள்ளே நுழைந்தோம். அப்படி நுழைந்த பிறகுதான், குடுமியான்மலையின் சிறப்பு எப்படிப்பட்டது என்பது எங்களுக்குப் புரிந்தது.
முற்காலப் பாண்டியர்களின் காலத்தில்- அதாவது ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டில், சிறிய குடைவரைக் கோயிலாக மட்டுமே இருந்த குடுமியான்மலை, வருடங்கள் செல்லச் செல்ல, மெல்ல மெல்ல பெரிய கோயிலாக உருவெடுத்தது. குடுமியான்மலைக்கு அக்காலத்தில் வேறு பெயர்கள் இருந்திருக்கின்றன- ‘திருநலக்குன்றம்’ என்பது ஒரு பெயர். ‘திருநிலக்குன்றம்’ என்பது இன்னொரு பெயர். இரண்டாம் ராஜராஜசோழன் காலத்தில் ( 1146-1163) சிகாநல்லூர் என்ற பெயரும் வழக்கில் இருந்திருக்கிறது.
AD 1215- 1265 வருடங்களுக்குள், கோயில் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
கோயில் வளாகத்திற்குள் மொத்தம் மூன்று கோயில்கள் உள்ளன- மேலக்கோயில் அல்லது திருமேற்றளி என்பது ஒன்று, சிகாநாதர் அல்லது குடுமிநாதரின் கோயில் இரண்டாவது, சௌந்தரநாயகியம்மன் கோயில் மூன்றாவது. இவை தவிர, மலை மீது முருகப்பெருமானுக்கும் ஒரு கோவில் உண்டாம்.
உள்ளே மண்டபத்திற்குள் நுழைந்தவுடன், முதலில் கண்ணில் படுவது- ஒவ்வொரு தூணிலும் இழைக்கப்பட்டிருக்கும் ளுயரச் சிற்பங்கள். சிற்பங்கள் பலவிதம்- ஒவ்வொன்றும் ஒரு விதம். புன்னகையுடன் அருள்புரியும் கணபதி, இராவணன், ஆஞ்சநேயர்...அருகில் இருக்கும் மண்டபங்களின் தூண்களில் சில சாய்ந்து, இடிந்து போயிருக்கின்றன. ‘உள்ளே நுழைவது ஆபத்து’ என்று போர்டே வைத்திருக்கிறார்கள்.
கருவறைக்குள்ளே குடுமிநாதர் (அல்லது சிகாகிரீஸ்வரர்), உச்சியில் குமிழ் போன்ற ஒன்றுடன் காட்சி தருகிறார் (சுயம்புலிங்கம் என்று சொல்கிறார்கள்).
குடுமிநாதர் சன்னதியின் வெளிப் பிரகாரத்தைத் தாண்டி வந்தால், சௌந்தரநாயகி அம்மனின் சன்னதிக்கு வரலாம். எளிமையாக, அதிக அலங்காரங்கள் அற்று விளங்குகிறது. ஒரு சிறிய கிணற்றுக்கு அருகில், அம்மன் சன்னதியின் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து இளைப்பாறினோம்.
பொதுவாகக் கோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கும்- யார் கட்டியது, எப்போது கட்டியது, யார் பராமரிப்பது, அதற்குரிய நிவந்த விவரங்கள் போன்ற விஷயங்களைக் குறிக்கும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது...
13’ X 14’ அளவுடைய, பல்லவ கிரந்த எழுத்துக்களால் ஆன, இசைக்கல்வெட்டு. ‘சித்தம் நமச்சிவாய’ எனத் தொடங்கும் இந்தக் கல்வெட்டு, இசை இலக்கணத்தையும், யாழினையும் விவரிக்கிறது. கோயிலைத் தாண்டி, பூட்டியக் கதவுடன் இருக்கும் ஒரு பகுதியில், மலைச்சுவரில் வெட்டப்பட்டிருக்கிறது. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘நாட்டிய சாஸ்திரம்’ என்ற நூலுக்கும், பதின்மூன்றாம் நூற்றாண்டின்பொழுது இயற்றப்பட்ட ‘சங்கீத ரத்னாகரம்’ என்ற நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு, இந்திய இசையைப் பொறுத்தவரை, மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ஏழு ஸ்வரங்களைப் பற்றிய விவரங்களை ஏழு பகுதிகளாகக் கொடுக்கும் இந்தக் கல்வெட்டில், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் உருவாக்கியதாகச் சொல்லப்படும் ‘ஸங்கீர்ண ஜாதி’யைப் பற்றிய விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. இதன் காரணமாக, ‘ஸங்கீர்ண ஜாதிப் பிரகரணர்’ என்ற பட்டமும் அம்மன்னனுக்கு வழங்கப்பட்டதாகச் சொல்வார்கள்.
ஆவலுடன் நான், திரு.சீதாராமன், விக்கி, ஆகியோர் பூட்டிய கதவைத் த்¢றந்த வழிகாட்டியின் பின்னால் நுழைய...அங்கே இடதுபக்கம் இருந்த மண்டபங்களைத் தாண்டி, நேர் எதிரே, பெரிய மண்டபம் ஒன்றின் கூரையில், சுவர் முழுதும் பரவியிருந்த இசைக் கல்வெட்டுக்களை லேசாக மறைத்தபடி மெகா சைஸில் நான்கு தேனடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றைச் சுற்றி தேனீக்கள் ‘விர்’ரென்று பறந்துகொண்டிருந்தன.
“காலைலியே ஆபீஸரைக் கொட்டிடுச்சுங்க...” என்று எங்கள் வழிகாட்டி சொல்லும் பொழுதே, ஒரு தேனீ ஆசையுடன் விக்கியைத் துரத்த ரம்பிக்க - அவ்வளவுதான், ஓட்டம் பிடித்தோம். (திரு. சேஷாத்ரிதான் தன்னுடைய புத்தகத்தின் உதவியுடன் விக்கியின் கூந்தலை விட்டுப் பிரிய மனமில்லாத அந்தத் தேனீயை விடாப்பிடியாகப் பிடுங்கியெடுத்தார். :-)).
பூட்டிய வளாகத்திற்கு வெளியிலிருந்து பார்த்தால், மலைச்சுவரிலே சிறிய புள்ளிகளாக ரிஷபத்தின் மேல் சிவ பெருமானும், பார்வதி தேவியும், கைலாயவாசிகளும் தெரிகின்றனர். அவை, அக்காலச் சிற்பிகளின் கைத் திறனை அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றன.
குடுமியான்மலைக் கோயிலின் வாயிலில் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, கோயிலை இறுதியாக கண்களில் நிரப்பிக் கொண்டு, கிளம்பினோம்.
Posted at 11:01 pm by pavithra
Tuesday, February 10, 2004
கொடும்பாளூர்
For a picture version of this post, go here.
‘பொன்னியின் செல்வனி’ன் இளவரசி வானதியைத் தந்த கொடும்பாளுர். வீரர் பூதி விக்கிரமக் கேசரியை அறிமுகப்படுத்திய கொடும்பாளுர். கல்கியின் வர்ணனைப்படி ‘பொட்டல்காட்டு பிராந்தியமான, சோழநாட்டின் அபரிமிதமான நீர்வளமற்ற ‘ கொடும்பாளூர். ‘எப்படித்தான் இருக்கும் இந்த ஊர்?’ என்ற பார்க்கத் தூண்டிய கொடும்பாளூர்.
அப்படிப்பட்ட கொடும்பாளூரின் பிரசித்தி பெற்ற ‘மூவர் கோயி’லுக்கு(புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ.தொலைவு), நாங்கள் வந்து சேர்ந்த பொழுது மாலை மணி ஐந்து. வெயிலின் சூடு தணிய ரம்பித்திருந்தது. மெல்லிய காற்று எங்களைச் சுற்றிக் கொண்டு, சாலை மணலை வருடிச் சென்றது.
கல்கியின் வர்ணனை சரியாகத்தான் இருக்கிறது. கருவேலமரங்களும், வறண்ட நிலமுமாகத்தான் இருக்கிறது இளவரசி வானதியின் பிறந்த வீடு. அங்கங்கே வயல்வெளிகள் மனதுக்கு இதமளிக்கின்றன.
சாலை வளைந்து திரும்பியதும், இரு சிறிய கோயில்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. சுற்றிலும் மண்டபங்கள் இருந்ததற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
கொடும்பாளூரின் பல கோயில்களுள், மூவர் கோயிலும், முசுகுந்தேஸ்வரர் கோயிலும்தான், அந்தப் பிரதேசத்தின் சிற்ப வேலைப்பாட்டிற்குப் பெயர் போனதாகக் கருதப்படுகின்றன.
ஒரு காலத்தில், ‘மூவர் கோயில்’ கண்ணைப் பறிக்கும் அழகுடன், வித்தியாசமான சிற்பக் களஞ்சியமாக விளங்கியிருக்க வேண்டும். இப்பொழுதோ, பெயருக்கேற்ப இருக்க வேண்டிய மூன்று கோயில்களுக்குப் பதில், இரு கோயில்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. மூன்றாவது கோயிலின் அடித்தளம் மட்டுமே பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.
சோழர்களின் காலத்தில் கொடும்பாளூர் பிரசித்தி பெற்று விளங்கியது இருக்கட்டும்- ‘சிலப்பதிகார’த்தின் காலத்திலிருந்தே இது ‘கொடும்பை’ என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்திருக்கிறது. ‘இருக்குவேளிர்’ குலத்தின் முக்கிய நகரமாக இருந்த இது, பழங்காலத்தில் ‘இருக்குவேளூர்’ என்ற பெயர் கொண்டிருந்திருக்கிறது. ‘கோனாட்டுக் கொடிநகரம்’ என்று பெரியபுராணத்திலும் ‘பெயர்’ பெற்றிருக்கிறது.
றிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை ‘இருக்குவேளிர்களின்’ திக்கத்திற்குள் இருந்த கொடும்பாளூர், திரூப்புறம்பியத்தில் சோழர்கள் பல்லவர்களையும் பாண்டியர்களையும் முறியடித்த பிறகு (880 AD) சோழர்கள் வசம் வந்திருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டு வரை சோழர்களின் பராமரிப்பில் இருந்த பிறகு, முஸ்லிம் படையெடுப்பில் நகரம் அழிந்து போயிருக்கலாம் என்று சொல்கிறார்கள். வாணிபத்தில் கொழித்து, ‘நானா தேசத்து ஐந்நூற்றுவ’ரின் திக்கத்தில் செழித்திருந்த இந்த நகரத்தில் இப்பொழுது மிஞ்சியிருப்பவை சில கோயில்கள் மட்டுமே.
‘மூவர் கோயி’லை’க் கட்டியது பெருவீரனான பூதி விக்கிரம கேசரி. கல்வெட்டுக்களின் படி பார்த்தால், தன் பெயரிலும், தன் இரு மனைவியரான ‘நங்கை கற்றளி பிராட்டி’ மற்றும் ‘வரகுணா’வின் பெயரிலும் (பெயர்கள் அட்டகாசமாக இல்லை?) கட்டியிருந்திருக்கிறார் (மனைவியரின் மேல் எவ்வளவு பாசமிருந்தால் இப்படிச் செய்யத் தோன்றும்?). கல்வெட்டுக்கள் இப்படி சொன்னாலும், ‘மூவர் கோயில்’ என்ற பெயருக்கு வித விதமான காரணங்கள் உலவுகின்றன. ‘அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர்’ மூவரின் பெயரால் எழுப்பப்பட்டது என்கிறார்கள் சிலர். ‘சிவன், விஷ்ணு, பிரம்மா’ மூவருக்காகவும் எழுப்பப்பட்டது என& | | |