|
|
Tuesday, August 31, 2004
Gangai konda Cholapuram - #2
கங்கை கொண்ட சோழபுரம் - 2
For a picture version of this post, go here.
ஓலை வேயப்பட்ட இடங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், கீஈஈஈஈஈழே...மனிதர்கள் எறும்புகளைவிடச் சிறிய புள்ளிகளாகத் தெரிந்தனர். அவ்வப்பொழுது சிலர் என்னவோ சாரத்தில் அசைகிறதே? என்று நிமிர்ந்து பார்க்க, ஓலை வழியே கையைசைத்தோம். (அதைப் பார்த்து அவர்கள் என்ன நினைத்தார்களோ, கடவுளுக்கே வெளிச்சம். ஐயோ! அங்க ஆரோ மனுசங்க இருக்காங்கடீ! என்ற குரல் ஒன்று கேட்டதாக ம(மெ)கா திருப்தியுடன் நண்பர் ஒருவர் அறிவித்தவுடன் ஏற்பட்ட சந்தோஷத்தைத் தவிர்க்க முடியவில்லை.)
சாரப் பலகைகளின் மேல் நின்றவாறு, காரைப் பூச்சால் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்களை ரசித்தோம். ஓரிடத்தில் லிங்கோத்பவர் கம்பீரமாகக் காட்சியளித்தார். அருகிலேயே தட்சிணாமூர்த்தி சாந்தமாக அமர்ந்திருந்தார். இன்னோர் இடத்தில், குழந்தை விநாயகரின் கூந்தலில், சிவபெருமான அருமையுடன் கொன்றை மலர்களை சூட்டிக்கொண்டிருந்தார்!
நாஸிகா என்று கூறப்படும் வளைவுகள் வெவ்வேறு தெய்வ உருவங்களுக்கிடையில் கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தன. கோரமான பற்கள் தெரியும் புன்னகையுடன், சிங்க முகங்களும் எங்களை வரவேற்றன.
டாக்டர். கலைக்கோவன் எங்களுடன் சேர்ந்துகொண்டவுடன், வாழ்நாளில் அதுவரை நாங்கள் அடைந்திராத நூதனமான ஒரு அனுபவம் எங்களுக்கு வாய்த்தது. தரையிலிருந்து அத்தனை அடி உயரத்தில், எங்களை நழுவவிடாமல் காப்பாற்றிகொண்டிருந்த சில மரப்பலகைகளின் மீது, க.கொ.சோழபுரத்தின் விமானத்தின் மேற்பகுதியைப் பற்றிய பாடம் ஆரம்பமாகியது.
நாஸிகா, நேத்ர நாஸிகா, சாலா, என்று விதவிதமாக வார்த்தைகள் புகுந்து புறப்பட்டன. போதிகைகளைப் பற்றியும் பேச்செழுந்தது. (கவனிக்க: கோயில் தூண்களில் மேற்புறம், அவை கூரையைத் தொடும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வடிவத்திற்கு, போதிகை என்று பெயர்.). இந்தப் போதிகைகள் பெரும்பாலும் சீராக, நடுவில் எந்த இடைவெளியும் இல்லாமல் மேற்புறம் பயணிக்கும். அப்படி இடையில் வெட்டு விழுந்தால்க.கொ.சோழபுரத்தைப் போல்அது இராஜ ராஜ சோழனின் காலம், அதற்குப் பிற்பட்ட காலத்திற்குப் பிறகு கட்டப்பட்டது என்று உறுதியாகச் சொல்லலாம். போதிகைகளில் சாதாரணப் போதிகைகளும் உண்டு. போதிகையின் நடுவே வெட்டு விழுந்து, அது துருத்திக்கொண்டு இருப்பது போலும் அமைப்பது உண்டாம். குலோத்துங்க சோழனின் காலத்தில், இந்த முறை மாறிவிட்டது.
போதிகைகளின் மேற்புறம், வாஜனம், கபோதம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. பிரம்மாண்டமான கோயில் என்பதால், கோயிலின் வெவ்வேறு பாகங்களும் அதற்கேற்ற அளவில் அமைக்கப்பட்டிருந்தன.
விமானத்தின் உட்புற அமைப்பை வெளிப்பார்வையிலிருந்து மறைக்கும் விதமாக, வெளிப்புறம் திறமையாக அமைக்கப்பட்டிருந்த வித்தையை நாங்கள் அறிந்துகொண்டோம். உட்புறம், சுவர் மூலை திரும்பும் இடத்தில் லேசாக வளைக்கப்பட்டிருந்ததல்லவா? வெளிப்புறம், விமானம் எண்கோணமாக அமைக்கப்பட்டிருந்தது. வெளிப்புற அமைப்பை வைத்து, உட்புறம் விமானத்தின் அமைப்பை சொல்ல முடியாதபடி அக்கால ஸ்தபதிகள் விமானத்தைத் திறமையாக அமைத்திருந்தனர். விமானம் மேலே செல்லச் செல்ல, எண்கோண அமைப்பு காப்பாற்றப்பட்டு வந்தது. கடைசித் தளத்தில் அது மறைந்து, வட்டமான வடிவத்தை எட்டிவிட்டது.
இம்மாதிரிப் புதுவிதமான விமான/சிற்ப வடிவங்களை அமைப்பதில் சோழர்கள் அதிகத் திறன் வாய்ந்தவர்கள்.
விமானத்தின் உயரம் ஏற ஏற, அதன் சுற்றளவு சிறுகச் சிறுக, விமானத்தின் அங்கங்களும் அளவில் குறுகிக்கொண்டே, தளத்திற்குத் தளம் உள்வாங்கியவாறு அமைக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாக, ஒரு தளத்திற்கு மூன்று அடிப்படை உறுப்புகள் உண்டு: அதிட்டானம் (Base), சுவர், மற்றும் கூரைப்பகுதி. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் ஒரு தளம் என்று குறிக்கப்படுகின்றது. இந்த அடிப்படை அமைப்புக்ளை வைத்துக் கொண்டு, அவற்றை மேலும் மேலும் அழகுபடுத்திக்கொண்டே செல்வதில் சோழர்களுக்கு நிகர் சோழர்களேதான். அப்படிப் பார்த்தால், அதிட்டானம் என்ற பகுதியே பல்வேறு பகுதிகளாக மாறி, அமைக்கப்படும் வடிவம், அமைக்கின்ற சிற்பியின் திறன், அவர் வாழ்ந்த காலகட்டம், இவற்றிற்கேற்றாற்போல் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும். ஏன்? சில சமயம், ஒரு தளத்தோடு நில்லாமல், பல தளங்கள் அமைக்கும்பொழுது, அதிட்டானம் என்ற பகுதியே நீக்கப்படுவதும் உண்டு!
இத்தனை நுணுக்கத்துடன் தளங்கள் அமைக்கப்பட்டதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று: அழகுணர்ச்சி என்று சொல்லப்படும் aesthetic sense. செய்யும் எதையும் இரசனையுடன் செய்தல். மற்றொன்றுவழிபாட்டுத்தலம் என்பதனால். இறைவன் குடிகொண்டுள்ள இடம், அவனைப் பார்க்க யிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்லும் இடம், மிக அழகானதாக, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொண்டு போகும் விதமாக அல்லவா இருக்க வேண்டும்?
இந்தியாவின் விமான அமைப்புகள் மொத்தம் மூன்று வகைகளைச் சார்ந்தவை:
1. நாகரா(Nagara) அமைப்பு (சதுர வடிவம்)
2. வேசரா(Visera) அமைப்பு (வட்ட வடிவம்)
3. திராவிட(Dravida) வடிவம் (பல கோணங்கள்அதாவது facets கொண்டது)
தமிழ் நாட்டுக் கோயில்களில், நாகர அமைப்புடன் பரவலாகப் பல கோயில்களை காண முடியும். முழுக்க முழுக்க திராவிட அமைப்பில் விமானங்கள் கொண்ட கோயில்கள் நம்மிடையே இல்லை. முழுதாக வேசர அமைப்பில் விமானங்கள் கொண்ட கோயில்களும் இல்லை.
தமிழகக் கோயில்களைப் பொறுத்த வரையில், விமான அமைப்பில் சிறந்து விளங்கியவர்கள் முதலாம் இராஜராஜ சோழர், மற்றும் இராஜேந்திர சோழர். தஞ்சைக் கோயிலை வடிவமைத்த இராஜராஜர், தனது விமானத்தை சதுரமாகவே எழுப்பினார். முடிவில், உச்சியில் இருந்த கலசத்தை மட்டும் திராவிட விமான அமைப்பில் எழுப்பினார். இராஜேந்திர சோழர் ஒரு படி மேலே போய், க.கொ.சோழபுரத்தின் விமானத்தில் மூன்று விதங்களைக் காட்டினார்.
க.கொ.சோழபுரத்தில் உள்ளது போல், மூன்று விதமான விமான அமைப்புகளை உள்ளடக்கிக் கொண்டு, வெளியிலிருந்து பார்த்தால் உட்புறமாக விமானம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று உணர்ந்து கொள்ளமுடியாதபடி நேர்த்தியாக அமைக்கப்பட்ட விமானம், இந்தியாவிலேயே வேறெங்கும் கிடையாதாம்.
எவ்வளவு உன்னதமான படைப்பு இது!
Posted at 05:02 am by pavithra
Wednesday, August 25, 2004
Gangai konda Cholapuram - #1
கங்கை கொண்ட சோழபுரம் - 1
For a picture version of this post, go here.
கங்கை கொண்ட சோழபுரம்.
சோழ மன்னர்களில் பெரும்புகழ் வாய்ந்தவரும், முதலாம் இராஜ ராஜ சோழரின் புதல்வருமான இராஜேந்திர சோழர் அமைத்த கோயில். கங்கை வரையிலும் சோழர்கள் சென்று, வென்று வந்ததன் அடையாளமாக எழுப்பப்பட்ட கலைப் பொக்கிஷம். அசப்பில் தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்றே இருந்தாலும், சற்றே பெண்மைத்தனம் நிரம்பியது என்று சொல்வார்கள். வாயில்பகுதிகள் சிதிலமடைந்து காணப்பட்டாலும், கோயிலின் பிரம்மாண்டமும், அதன் அழகும் நம்மைக் கவர்ந்து விடுகின்றன.
நாங்கள் க.கொ.சோழபுரம் போய்ச் சேர்ந்த பொழுது, கோயிலின் விமானம் ஓலைகளால் மூடப்பட்டு, சாரங்களால் சூழப்பட்டு, முகம் தெரியாமல் உடையணிந்திருந்த கோஷாப் பெண்மணியை நினைவுபடுத்தியது. கோயில் வளாகத்தின் பச்சைப் பசேல் புல்வெளிகளில் சற்று நேரம் நடமாடிவிட்டு, அங்குமிங்கும் கேமராக்களை வைத்து சில புகைப்படங்களையும் எடுத்துவிட்டு, நிமிர்ந்தபொழுது, ASIக்காரர்கள் எங்கள் முன் காட்சி தந்தனர்.
அவர்களுடன் கோயிலின் உள்ளே சென்று, சிவபெருமானை தரிசித்தோம். தரிசனம் முடிந்தவுடன், டாக்டர் கலைக்கோவன் எங்களை சந்நிதியின் ஒருபுறமாக அழைத்துச் சென்றார். Sandhara Cella என்று அழைப்படும், கர்ப்பகிரஹத்திற்கும் வெளிச்சுவருக்கும் நடுவில் செல்லும் பாதையில் நுழைந்தோம்.
நாங்கள் நின்று கொண்டிருந்த தளத்தின் முடிவில், கூரை கருங்கல்லால் மொத்தமாக மூடப்பட்டிருந்தது. அடுத்த தளத்திற்கு மேலே சென்று பார்த்தால்தான், விமானம் வரையில் செல்லும் சுவர் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இயலும். ஆக...சாரத்தின் மேலேறுவதில் முதல் கட்டம் தொடங்கியது.
அப்பொழுதே மணி ஒன்று. வேண்டாத சாமான்களை பிரகாரத்தின் ஓரத்தில் கம்பிக் கதவு போட்டிருந்த ஒரு அறைக்குள் பத்திரப்படுத்திவிட்டு, ஒரு புதுமையான அனுபவத்தைப் பெறப்போகிறோம் என்ற உணர்வுடன், க.கொ.சோழபுரக் கோயிலின் சாரத்தின் மீது ஏறினோம்.

கட்டைகளின் மீது ஜாக்கிரதையாகக் கால் வைத்தபடி, நடுநடுவே குனிந்து எங்கோ பாதாளத்திலிருந்த தரையைப் பார்ப்பதே புதிய அனுபவமாக இருந்தது. முதல் தளத்திற்கு வந்தவுடன், டாக்டர் எங்களை விமானத்தின் உட்புறம் அழைத்துச் சென்றார்.
இந்தத் தளத்திலும், திருச்சுற்றின் (Sandhara Cella பகுதி) கூரை, கற்பலகைகளால் மூடப்பட்டிருந்தது. மெல்ல, தலைக்கு மேல் குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டிருந்த கம்பங்களைத் தாண்டிக்கொண்டு (அடிமைப்பெண் மாதிரி வாங்கப்பா... - டாக்டர். கலைக்கோவன்), கர்ப்பக்கிருஹத்திற்கு நேர் மேலேயிருந்த அறைக்குள் நுழைந்தோம்.
கோயிலின் விமானத்தின் உட்புற அமைப்பே ஒரு architectural அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். தஞ்சைக் கோயிலில், விமானத்தின் உட்புறம் சதுரமாக அமைக்கப்பட்டிருக்கும். விமானம் மேலே செல்லச் செல்ல, மூலைகளில் right-angles காப்பாற்றப்பட்டுமிருக்கும். க.கொ.சோழபுரத்தின் விமானத்தின் உட்பகுதி, மூலைகளில் லேசாக வளைக்கப்பட்டிருந்தது. விமானம் அமைப்பதில் இதுவும் ஒரு வகை என்பதைத் தெரிந்துகொண்டோம்.
அடுத்தடுத்த தளங்களுக்கு நாங்கள் மேலேற (இம்முறை சாரத்தின் வழியாகச் செல்லாமல், உட்புறம் சரிவாக, கைப்பிடிகள் எதுவுமற்ற படிக்கட்டுகள் வழியாகவே மேலேறினோம்), வெளிப்புறம் காட்சி தந்த விமான அமைப்பிற்கும், உட்புறம் அது அமைக்கப்பட்டிருந்த விதமும் எங்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டது. உட்புறம் விமானத்தில் சுவர்கள் குறுகலாகிக்கொண்டே, உச்ச்ச்ச்ச்ச்...சியில், எங்கள் கண்களுக்குப் புலப்படாத இருளில் மறைந்து போக, வேலையாட்கள் சிலர் அவர்களுக்கே உரிய தைரியத்துடன், சர்க்கஸின் acrobats தோற்றுப்போகும் வகையில் கம்பத்திற்குக் கம்பம் தாவிக்கொண்டு, உச்சியை நோக்கி ஏறினார்கள். அவர்களின் குரல்களையும், அவ்வப்பொழுது அவர்கள் அடித்த டார்ச்சு வெளிச்சத்திலும், விமானத்தின் உச்சி எங்கள் கண்களுக்குத் தெரிந்தது.
விமானத்தின் உட்புற அமைப்பைக் கண்டு வியந்துவிட்டு, வெளியே வந்தோம். உட்சுவருக்கும் வெளிச்சுவருக்கும் இடையே நின்றுகொண்டு, அண்ணாந்து பார்த்த பொழுது, அதிசயமான, மிக அழகிய காட்சி ஒன்று தென்பட்டது. வெளிச்சுவரும் உட்சுவரும் செங்குத்தாக மேலேறுவதற்குப் பதிலாக, சிறிய படிகளாக, கொஞ்சம் கொஞ்சமாக குறுகிக்கொண்டே மேலேறின- தலைகீழாக்கிய படிக்கட்டைப் போல (பார்க்க புகைப்படம்). இதை corbelling என்று சொல்கிறார்கள்.
உட்புறச் சுவர்களின் ஒரங்களில், எங்கள் டார்ச் விளக்கின் வருகையைக் கண்டு பயந்து ஓடிய பூச்சிகள் சுவர்களில் ஓட்டிக்கொண்டு, நாங்கள் போவதை பயத்துடன் கவனித்தன. விளக்கு வெளிச்சத்தில், சுவற்றில் அவை குமிழ் குமிழாகப் பளபளத்த காட்சியைப் பார்த்தவுடன், பிரும்மாண்டமான அரண்மனை ஒன்றில், சுவற்றில் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த இரத்தினங்களும், வைர வைடூர்யங்களும்தான் நினைவுக்கு வந்தன.(The Mummy படத்தில், சுவற்றில் இருக்கும் பூச்சிகள் போல :-)
இதுவரை நாங்கள் ஏறிவந்த படிக்கட்டுகளும், சிமெண்ட் பூசப்பட்ட தளங்களும் இனி இல்லை. இதற்கு மேல் நிலைக்குச் செல்ல வேண்டுமானால், சாரங்களின் உதவியைக் கொண்டு, அங்கு வேலை செய்தவர்களைப் போல், கம்பத்திற்குக் கம்பம் தாவினால்தான் உண்டு.
இந்த சந்தர்ப்பத்திற்காகவல்லவா கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்தது? அதை விட்டுவிட்டால் எப்படி? கையால், சாரமாகப் பொருத்தப்பட்ட கம்பங்களின் மேலேயே ஜாக்கிரதையாகக் கால் வைத்து ஏறத் தொடங்கினோம். ஏறி, பலகைகள் கோர்க்கப்பட்ட தளத்திற்கு வந்து சேர்ந்தோம்.
Posted at 12:19 am by pavithra
Sunday, August 08, 2004
குன்னாண்டார் கோயில்
For a picture version of this post, go here.
மலையடிப்பட்டியிலிருந்து கிளம்பிய நாங்கள், சுமார் இரண்டரை மணிக்கு குன்னாண்டார் கோயில் என்ற சிறிய கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம்.
படைபடைக்கிற வெயிலில், ஒரு சிறிய மலைப்பகுதியின் கீழ்ப்புறத்தில் அமைந்திருந்த அந்தக் கோயிலுக்கு நாங்கள் வந்து சேர்ந்த பொழுது, சுடச்சுட, ஆவி பறக்க, ASIக்காரர்களின் உபயத்தில் எங்களுக்கு விருந்து ஒன்று தயாராக இருந்தது.
பெரிய பெரிய பாத்திரங்களில், பதினைந்து பேருக்கு தயார் செய்யப்பட்டு, சூடு பறக்க எங்களுக்குப் பரிமாறப்பட்ட விருந்தை, கோயிலின் மண்டபம் ஒன்றில் வயிறார சாப்பிட்டுவிட்டு, கோயிலின் வாயிற்படிக்கட்டில் வரிசையாக அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.
மதியக் காற்று, அந்த நிழலில் சுகமாக வீசியது. கிராமத்துச் சிறுவர்கள் சிலர், எங்களுக்கெதிரில் இருந்த சில மண்டபங்களின் தூண்களைப் பற்றிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.
மூன்று மணி சுமாருக்கு, நாங்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருந்த ஆய்வுப் பணியில், டாக்டர்.கலைக்கோவன் எங்களை முதன்முதலாக ஈடுபடுத்தினார்.
குன்னாண்டார் கோயிலின் முன் மண்டபங்களைத் தாண்டி, குடைவரைக்குமுன்பாக இருந்த முகமண்டபத்தை அடைந்தோம். முன்னேற்பாடாகக் கையோடு எடுத்து வந்திருந்த டார்ச்சு லைட்டுகளையும், அளக்கும் டேப்களையும் வெளியே எடுத்தோம். விவரங்களைக் குறித்துக்கொள்வதற்கு நோட்டுப்புத்தகங்களைப் பிரித்து எடுத்துக்கொண்டோம்.
அடுத்த மூன்று மணி நேரங்களும், குடைவரையின் கருவறையை அளந்து, ஆவுடையாரின் அமைப்பை அங்கம் அங்கமாக ஆராய்ந்து, முகமண்டபத்தின் ஒவ்வொரு பக்கமும் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களை அணு அணுவாக ரசித்து, அவற்றைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொண்டு...
இது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலையில்லைசுத்த பத்தம், அது இது என்றெல்லாம் பார்க்காமல், முனைந்து வேலை செய்ய வேண்டும்; அப்படி செய்தால்தான் அதற்குரிய ஈடுபாடு வரும்; பலனும் கிடைக்கும் என்று முன்கூட்டியே, அன்று காலையில் டாக்டர்.கலைக்கோவன் எங்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தது நன்கு நினைவிலிருந்ததால், குப்பை கூளங்களும், உரித்த தேங்காய் மட்டைகளும், வருடக்கணக்காக வழிந்து ஓடியிருந்த எண்ணெய்ப் பிசுக்கும், விதவிதமான வண்ணங்களில் சிதறி ஓடியிருந்த பெயர் தெரியா திரவங்களின் மிச்சங்களும், பழங்காலத்துக் கோயில்களுக்கேயுரிய பூச்சிகளின் அணிவகுப்பும் எங்களை பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மாறாக, முகமண்டபத்திற்குள் அவ்வப்போது பிரவேசித்த சில்லென்ற காற்று எங்களுக்குப் புத்துயிர் கொடுத்தது; தடவிப் பார்த்த சிற்பங்களுடன், டாக்டர்.கலைக்கோவனின் உதவியால் எங்களால் பேச முடிந்தது; இதுவரை நாங்கள் அறியாத பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. கோயில்களின் பலவித பாகங்கள் என்னென்ன, செதுக்கப்பட்ட சிற்பங்கள் அணிந்துள்ள அணிகலன்கள் என்னென்ன, அவற்றை எப்படி இனம் கண்டு கொள்வது, போன்ற பல விஷயங்கள் எங்களுக்கு பரிச்சயமாயின. கோயில்களை ஒரு சில முறைகளிலேயே பார்த்துப் பழகியிருந்த நாங்கள் அன்று புதிய பாடங்கள் கற்றுக்கொண்டோம். ஒரே மதியத்தில் எங்கள் அணுகுமுறை மாறியது என்றுதான் சொல்ல வேண்டும்.
எடுக்கவேண்டிய குறிப்புகளையெல்லாம் எடுத்த பிறகு, நாங்கள் வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசித்த பொழுது, மணி ஆறைத் தாண்டியிருந்தது.
குன்னாண்டார் கோயிலின் பின்பக்கம் இருந்த மலைச்சரிவுக்குச் செல்ல, சில படிக்கட்டுக்கள் வெட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஏறிச்சென்று, இடிந்தும் அழிந்தும் போயிருந்த கோட்டைச் சுவர்களைப் பார்த்தவாறு, மலைச்சரிவின் மேற்புறத்தில் சாய்ந்துகொண்டோம்.
சூரியன் மேற்கில் இறங்கிக்கொண்டிருக்க, இருள் மெல்ல மெல்ல பரவிக்கொண்டிருந்தது. மாலை வீடு திரும்பும் பறவைகளின் சப்தம் கலப்படமாக காதுகளில் விழுந்தது. எங்களுக்குப் பின்புறம் அழகிய மயில் ஒன்று, யார் இந்த மனிதர்கள்? என்று பார்க்கும் பாவனையில், இடிந்த மதில் சுவரின் மேல் ஒய்யாரமாக வந்து நின்றது. பொழுது சாய்ந்துகொண்டிருந்த அந்தி வேளையில், கோட்டைச் சுவரின் மீது மயிலின் உருவம் தெளிவாகத் தெரிய, இயற்கையின் அற்புதமான ஓவியம் ஒன்றை நாங்கள் கண்டோம்.
எதிற்புறம் இருந்த மரங்கள் காற்றில் சலசலத்தன. மதில் சுவரின் மீதிருந்த மயிலின் குரலுக்கு, அந்த மரங்களிலிருந்து பதில் அகவல்கள் கேட்டன.
யாராவது கவிதை பாடுங்களேன். இந்த சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும். என்றார் டாக்டர்.கலைக்கோவன்.
கவிதைக்குப் பொருத்தமாகத்தான் இருந்தது அந்த இடமும், நேரமும். சிறிது நேரம் அதை ரசித்துக் கதையும் கவிதையும் பேசிவிட்டு, நன்கு இருள் விரிந்த பின்னர் அங்கிருந்து கீழே இறங்கினோம்.
இரவு வேனில் திருச்சி திரும்பும்பொழுது, அனைவரும் பாட்டும் கூத்துமாகக் கொட்டம் அடித்துவிட்டு (நான் இந்தப் பாட்டைப் பாடுவேன், இது என்ன சினிமா பாட்டோட மெட்டுன்னு சொல்லுங்க, பார்ப்போம்?" - திருமதி லலிதா) டாக்டரின் வீட்டிற்குச் சென்றோம். மேலும் சில மணி நேரங்கள், அவர் வீட்டில் அறுசுவை உணவு அருந்திவிட்டு, அவரவர் ஹோட்டல் அறைகளுக்குத் திரும்புகையில், மணி பத்தரை ஆகியிருந்தது.
பி.கு: 'குன்னாண்டார் கோயில்' குறித்து நானும், நண்பர் கமலக்கண்ணனும், 2003 ஆம் வருடம் தஞ்சையில் நடந்த Historical Congressஉக்காக ஒர் ஆய்வுக் கட்டுரை தயார் செய்து சமர்ப்பித்தோம். அந்தக் கட்டுரையும் விரைவில்...
Posted at 09:51 pm by pavithra
Friday, July 30, 2004
மலையடிப்பட்டி
For a picture version of this post, go here.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கீரனூரிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது மலையடிப்பட்டி. விசலூரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது.
மரங்கள் நிறைந்த பகுதியில் விசலூர்க்கோயில் அமர்ந்திருந்ததென்றால், மலையடிப்பட்டி, மொட்டைப் பாறைப் பிரதேசத்தில், ஒரு மலைக்குன்றில் குடையப்பட்டு, வெளிப்பார்வைக்கு சூனியமாகவும், உட்புறம், வெயில் வேளைக்குக் குளிர்ச்சியாக, எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்பது போல் தன் வாயில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தது.
மலையடிப்பட்டியில் இரு குடைவரைக்கோயில்கள் உள்ளன: ஒன்று சிவபெருமானுக்கு, இன்னொன்று திருமாலுக்கு. நாங்கள் முதலில் திருமால் கோயில் கொண்டிருந்த குடைவரைக்கோயிலையே தரிசித்தோம். இந்தக்கோயிலில் உள்ள பழைமையான ஒரு கல்வெட்டு, சோழ அரசன் இராஜகேசரியின் ஏழாம் ஆட்சியாண்டைச் சார்ந்ததாம். ஒளிபதி விஷ்ணுகிருகம் என்ற வார்த்தைகள், இக்கோயில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. காலத்தைப் பொறுத்தவரையில், சிவபெருமான் குடைவரைக்கும் பிற்பட்டது என்று தகவல். சுமார் ஒன்பது, அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
வாயிலைத் தாண்டி, பாதங்களில் மணல் கொதிக்கக் கொதிக்க வேகமாக நடந்து சென்று குடைவரையை அடைந்தோம். மூன்று வாயில்களுள், திறந்திருந்த நடு வாயிலின் வழியே உள்ளே நுழைந்தோம்.
பொதுவாகவே, குடைவரைக்கோயில்கள் மூன்று பகுதிகளைக்கொண்டவை- முகமண்டபம், முகமண்டபத்தையும் கருவறையையும் பிரிக்கும் பகுதி (இதை facet என்று சொல்கிறார்கள்), அப்புறம் கருவறை. மலையடிப்பட்டியின் facet மூன்று வாயில்களைக் கொண்டது. வாயில்களுக்கு அங்கணம் என்று பெயர்.
முக மண்டபத்திலும் பல்வேறு சிற்ப அதிசயங்கள் காரை பூசப்பட்டுக் காணப்பட்டன. உள்ளே நுழைந்தவுடன், கையில் மலர்களுடன், சுதை பூசப்பட்ட இரு அடியவர்கள், புன்னகையுடன் எங்களை வரவேற்றனர் (கைகளில் யுதங்களை வைத்திருந்தால் மட்டுமே, அவர்கள் துவாரபாலகர்கள்). முகமண்டபத்திலிருந்து, கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு செல்லும் வாயிலில், சிங்கங்களை அடித்தளமாகக் கொண்டு இரு அழகிய தூண்கள் எழும்புகின்றன. தூண்களில், முத்து மாலைகள் போன்ற மணிகள் மிக நுட்பமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு மாலாஸ்தானம் என்று பெயர்.
முகமண்டபத்திற்கு அடுத்த உள்மண்டபத்தில், வலது கைப்பக்கம், திருமாலின் திருவுருவம், தேவியருடன் காணப்படுகிறது. வைகுந்தநாதர் என்பது இவரது திருநாமம். அவருக்கு வலப்புறத்தில், வராக மூர்த்தி வீற்றிருக்கிறார்.
வைகுந்தநாதருக்கு நேரெதிர் சுவற்றில், புடைப்புச் சிற்பமாக, நரசிம்ம மூர்த்தி, கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
தலைக்கு மேலே, கூரையில் பல வண்ண ஓவியங்களும் காணப்பட்டன.
திருமயம் கோயிலை ஒரு முறை பார்த்தவர்களுக்கு, அந்தக் கோயிலுக்கும், மலையடிப்பட்டி குடைவரைக் கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை உடனே கண்ணில் பட்டுவிடும். ஆம், இங்கு மஹாவிஷ்ணு, மஞ்சளும் சிவப்புமாக டாலடித்த ஆதி சேஷனின் மீது சயனித்துக்கொண்டிருந | | |