|
|
Friday, July 30, 2004
மலையடிப்பட்டி
For a picture version of this post, go here.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கீரனூரிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது மலையடிப்பட்டி. விசலூரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது.
மரங்கள் நிறைந்த பகுதியில் விசலூர்க்கோயில் அமர்ந்திருந்ததென்றால், மலையடிப்பட்டி, மொட்டைப் பாறைப் பிரதேசத்தில், ஒரு மலைக்குன்றில் குடையப்பட்டு, வெளிப்பார்வைக்கு சூனியமாகவும், உட்புறம், வெயில் வேளைக்குக் குளிர்ச்சியாக, எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்பது போல் தன் வாயில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தது.
மலையடிப்பட்டியில் இரு குடைவரைக்கோயில்கள் உள்ளன: ஒன்று சிவபெருமானுக்கு, இன்னொன்று திருமாலுக்கு. நாங்கள் முதலில் திருமால் கோயில் கொண்டிருந்த குடைவரைக்கோயிலையே தரிசித்தோம். இந்தக்கோயிலில் உள்ள பழைமையான ஒரு கல்வெட்டு, சோழ அரசன் இராஜகேசரியின் ஏழாம் ஆட்சியாண்டைச் சார்ந்ததாம். ‘ஒளிபதி விஷ்ணுகிருகம்’ என்ற வார்த்தைகள், இக்கோயில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. காலத்தைப் பொறுத்தவரையில், சிவபெருமான் குடைவரைக்கும் பிற்பட்டது என்று தகவல். சுமார் ஒன்பது, அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
வாயிலைத் தாண்டி, பாதங்களில் மணல் கொதிக்கக் கொதிக்க வேகமாக நடந்து சென்று குடைவரையை அடைந்தோம். மூன்று வாயில்களுள், திறந்திருந்த நடு வாயிலின் வழியே உள்ளே நுழைந்தோம்.
பொதுவாகவே, குடைவரைக்கோயில்கள் மூன்று பகுதிகளைக்கொண்டவை- முகமண்டபம், முகமண்டபத்தையும் கருவறையையும் பிரிக்கும் பகுதி (இதை facet என்று சொல்கிறார்கள்), அப்புறம் கருவறை. மலையடிப்பட்டியின் facet மூன்று வாயில்களைக் கொண்டது. வாயில்களுக்கு ‘அங்கணம்’ என்று பெயர்.
முக மண்டபத்திலும் பல்வேறு சிற்ப அதிசயங்கள் காரை பூசப்பட்டுக் காணப்பட்டன. உள்ளே நுழைந்தவுடன், கையில் மலர்களுடன், சுதை பூசப்பட்ட இரு அடியவர்கள், புன்னகையுடன் எங்களை வரவேற்றனர் (கைகளில் யுதங்களை வைத்திருந்தால் மட்டுமே, அவர்கள் ‘துவாரபாலகர்கள்’). முகமண்டபத்திலிருந்து, கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு செல்லும் வாயிலில், சிங்கங்களை அடித்தளமாகக் கொண்டு இரு அழகிய தூண்கள் எழும்புகின்றன. தூண்களில், முத்து மாலைகள் போன்ற மணிகள் மிக நுட்பமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு ‘மாலாஸ்தானம்’ என்று பெயர்.
முகமண்டபத்திற்கு அடுத்த உள்மண்டபத்தில், வலது கைப்பக்கம், திருமாலின் திருவுருவம், தேவியருடன் காணப்படுகிறது. ‘வைகுந்தநாதர்’ என்பது இவரது திருநாமம். அவருக்கு வலப்புறத்தில், வராக மூர்த்தி வீற்றிருக்கிறார்.
வைகுந்தநாதருக்கு நேரெதிர் சுவற்றில், புடைப்புச் சிற்பமாக, நரசிம்ம மூர்த்தி, கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
தலைக்கு மேலே, கூரையில் பல வண்ண ஓவியங்களும் காணப்பட்டன.
திருமயம் கோயிலை ஒரு முறை பார்த்தவர்களுக்கு, அந்தக் கோயிலுக்கும், ‘மலையடிப்பட்டி’ குடைவரைக் கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை உடனே கண்ணில் பட்டுவிடும். ஆம், இங்கு மஹாவிஷ்ணு, மஞ்சளும் சிவப்புமாக ‘டால’டித்த ஆதி சேஷனின் மீது சயனித்துக்கொண்டிருந்தார். அவரது கரங்களின் ஆதரவைப் பெற்ற மார்க்கண்டேயரும், பூமிதேவியும் மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். ஒரு ஓரத்தில் மது கைடபர்கள் என்னும் அரக்கர்கள் கடவுளின் கோபத்திற்குப் பயந்து ஓடும் பாவனையில் செதுக்கப்பட்டிருந்தனர். கருடனும், தேவர்களும், இன்னபிற தெய்வ புருஷர்களும் இந்தக் காட்சியைப் பார்த்து ஆரவாரித்தனர்,
சாதாரண மனிதர்கள் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, இவ்வளவுடன் நின்று விடுவார்கள். இது நாள் வரையில் அப்படியே இருந்த எங்களுக்கு, சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இதே விஷயங்களைப் பார்க்கும் முறையே வேறு என்பது புரிய ஆரம்பித்தது. எங்களுக்குக் கழுத்தில் இடும் நகையாகவும், தலையில் சூடும் க்ரீடமாகவும் இருந்தவை அவர்களுக்கு முறையே ‘சரப்பளி’யாகவும், ‘கரண்ட மகுடமாகவும்’ மாறிவிட்டன. எங்கள் கண்ணுக்குப் புலப்படாத நுணுக்கங்கள் அவர்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தன - உதாரணத்திற்கு, தூண்களில் மேற்புறம், அவை கூரையைத் தேடும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வடிவத்திற்கு, ‘போதிகை’ என்று பெயர். அவை வளைந்து வளைந்து காணப்பட்டால், அதற்கு ‘தரங்க போதிகை’ என்று பெயராம். (தரங்கம் என்றால் ‘அலை’ என்று பொருள்). [பார்க்க புகைப்படம்]. இராஜராஜ சோழர் காலத்திற்கு பிறகு, இந்த வடிவம் மாற்றம் அடைந்துவிடுகிறது. தரங்க போதிகைகள் கொண்ட கோயில் என்றால், கண்ணை மூடிக்கொண்டு, ‘இராஜராஜர் காலத்திற்கு முற்பட்டது’ என்று கூறிவிடலாம்.
சிற்பிகள் சிற்பங்களைச் செதுக்குவதற்கு முன், சிவப்பு வர்ணத்தால் வரைந்து கொள்ளூம் கோடுகள், காரைப் பூச்சையும் தாண்டி அவர்களுக்குப் புரிந்தன. அவர்கள் அந்த விஷயத்தைச் சுட்டிக் காட்டிய பிறகே நாங்களும் அதைக் கவனித்தோம். கவனித்து வியப்பில் ஆழ்ந்தோம். அம்மாடி! முத்தரையர் காலத்துக் குடைவரையில், சிற்பிகள் ‘வரைந்த’ வர்ணம் கூட அப்படியே நின்றுவிட்டது! சித்தன்ன வாசலில் ஆயனர் கலந்து கொண்ட ஓவியப் போட்டி நினைவுக்கு வரவில்லை?
இந்த சமயத்தில், இரா.கலைக்கோவன் எங்களுக்கு ஒரு நூதனமான சோதனை ஒன்றை வைத்தார். “விசலூரில்தான் ஓரளவுக்குக் கோயில் சிலைகள் உங்களுக்குப் பரிச்சயமாகிவிட்டதே? எங்கே - இந்தக் கோயிலில், குடைவரைக்குள் செதுக்கப்படாத, வெளியிலிருந்து செதுக்கி உள்ளே பொருத்தப்பட்ட இரு சிற்பங்கள் இருக்கின்றன. அவை எவையெவை என்று கண்டுபிடியுங்கள், பார்ப்போம்?” என்றபடி, அவர் கையைக் கட்டிக் கொண்டு ஒரு தூணில் சாய்ந்துவிட்டார்.
நாங்கள் எல்லோரும் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டோம். ‘நம்மால் முடியுமா?” என்ற சந்தேகம் ஒரே ஒரு கணம்தான் தோன்றியது. உடனே, டார்ச்சு லைட்டு சகிதமாக மண்டபம் முழுவதும் பரவினோம்.
எத்தனை தேடியும், முக மண்டபத்தின் வலது மூலையிலிருந்த விஷ்ணு பகவான் சகித தேவியர் சிற்பம் ஒன்றையே எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் கையாலாகாத்தனத்துடன் நாங்கள் எங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள, எங்களைச் சோதித்தவர் ஒரு மந்தகாசப் புன்னகை புரிந்த வாறு “நீங்கள் கண்டுபிடித்த ஒரு சிற்பம்தான் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டது. இரண்டாவது சிற்பமே கிடையாது,” என்று சொல்ல, ‘கரகாட்டக்காரன் சினிமாவைப் போல், ‘அதுதாங்க இது’ என்று கவிழ்த்துவிட்டீர்களே’ என்று அங்கலாய்த்துக்கொண்டு, அடுத்த கட்ட ஆராய்ச்சிக்குத் தாவினோம்.
மலையடிப்பட்டியின் இரண்டாவது - அதாவது சிவபெருமானின் குடைவரைக்கோயிலுக்கு, ஒரு சிறிய பாதையின் வழியே நடந்து சென்று, மரங்கள் கவிந்திருந்த குகை வழியாக நுழைந்தோம். இங்கு சிற்பங்கள் கொட்டிக்கிடக்கவில்லையென்றாலும், ஒரு சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்று எங்களது கவனத்தைக் கவர்ந்தது. ‘அது என்ன?’ வென்று யோசிப்பதற்குள், இரா.கலைக்கோவன் எங்களை, இன்னொரு சுவற்றில் செதுக்கப்பட்டிருந்த சில சிற்பங்களின் பக்கம் இழுத்துக்கொண்டு சென்றார். ‘இந்தச் சிற்பங்களெல்லாம் எந்தெந்த தெய்வங்களைக் குறிக்கின்றன; சொல்லுங்கள் பார்ப்போம்’, என்று எங்களுக்கு இன்னொரு சிறிய டெஸ்ட் வைத்தார்.
ஆளாளுக்கு நாங்கள் “இது முருகன்- சென்னி தெரிகிறதே?”, “இது துர்கையாகத்தான் இருக்க வேண்டும்,” என்று சிற்பங்களின் உருவ அமைப்புகளை வைத்து எங்கள் முடிவுகளைத் தெரிவிக்க, அவற்றை இன்னும் நுணுக்கமாக ஆராய்வது எப்படி எங்களுக்குக் கற்றுக்கொடுத்த பின்னர்...எங்கள் ஆர்வத்தைக் கிளறிவிட்ட கல்வெட்டின் பக்கம் நகர்ந்தார்.
“இது ஒரு அபூர்வமான கல்வெட்டு... ஏறக்குறைய ஒரு confession என்று வைத்துக்கொள்ளூங்களேன்?”
“குடைவரைக்கோயிலுக்குள் confession? அப்படியென்ன விஷயம் அடங்கியிருக்கிறது இதில்?”
“இருக்கிறது,” என்ற இரா.கலைக்கோவன், நிதானமாக எங்களைக் கல்வெட்டைப் படிக்கச் சொன்னார். நிறுத்தி நிறுத்தி அதைப் படிக்கும்போதே விஷயம் விளங்கிவிட்டது என்றாலும், பின்னர் அவர் அதை விரித்துச் சொல்லும்பொழுதுதான் அந்த அதிசயக் கல்வெட்டின் சாரம் முழுவதும் விளங்கிற்று.
“கொலை செய்தவன் ஒருவன் வெட்டிய கல்வெட்டு இது,” என்றார் இரா.கலைக்கோவன் நாங்கள் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்க, ஒரு சிறிய புன்னகையுடன் தொடர்ந்தார். ”இந்தக் கல்வெட்டை வெட்டியவன் ஒரு தாசியுடன் பழக்கம் வைத்திருந்திருக்கிறான். ஒரு சமயம், அந்த தாசி, வேறொரு பிராமணனுடன் இருப்பதை அறிந்தவுடன், கண்மண் தெரியாத த்திரத்தில் அவளையும், அந்தப் பிராமணனையும் வெட்டிவிடுகிறான். உடனே அவனுக்குக் கண்ணும் தெரியாமல் போய்விடுகிறது...”
“அதெப்படி? கொலை செய்தவுடன் கண் தெரியாமல் போகுமா என்ன? அதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?”
“உண்டு என்று மருத்துவம் சொல்கிறதே? இதை எங்கள் படிப்பின் ஒரு பகுதியாக நாங்கள் படித்தோம். சில சமயங்களில், stress அதிகமானால், இந்த மாதிரி அபூர்வமாக நடப்பதுண்டு. சில சமயம் வாழ்நாள் முழுவதும் அந்தக் குறை நீங்காமல் இருப்பதுண்டு; இன்னும் வேறு சமயங்களில் அதுவாகவே சரியாகிவிடும். இந்த மனிதன் இந்தக் கோயிலுக்கு வந்தவுடன், அவன் பார்வையைத் தடை செய்துகொண்டிருந்த இரத்தக்கட்டியோ, ஏதோவொன்றோ, கண்களுக்குச் செல்லும் இரத்தக்குழாயிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் — அதனால், கோயிலுக்கு வந்தவுடன் அவனது பார்வை திரும்பிவிட்டது. பக்திப் பெருக்குடன், அவன் இந்தக் கோயிலுக்குச் சில கொடைகள் தந்து, ‘இன்ன காரணத்தினால்தான் நான் இவற்றைத் தர நேர்ந்தது’ என்பதையும் விலாவாரியாக வெட்டி வைத்திருக்கிறான். அதுதான் இந்தக் கல்வெட்டின் கதை. ” என்று முடித்தார் இரா.கலைக்கோவன்.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களூக்கு மௌளன சாட்சியாக நின்று கொண்டிருந்த அந்தச் சுவற்றை ஒரு முறை தொட்டுப் பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தோம்.
Posted at 08:06 am by pavithra
Thursday, July 22, 2004
விசலூர்
For a picture version of this post, go here.
வேனில் ஏறி, முதன் முதலில் நாங்கள் பார்ப்பதாக இருந்த விசலூர் என்ற ஊரை நோக்கிச் சென்றோம். திருச்சியிலிருந்து கிள்ளூக்கோட்டை செல்லும் சாலையில் ஒன்றரை மணி நேரப் பிரயாணத்தில் இருக்கும் இந்தச் சிற்றூருக்கு நாங்கள் வந்து சேர்ந்த பொழுது, மணி ஒன்பதாகியிருந்தது. வழியெங்கும், சரித்திர சம்பந்தமாக எங்களுக்கு இருந்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டது ஒருபுறம் என்றால், இன்றைய எழுத்தாளர்கள், சரித்திர நாவலாசிரியர்கள், அவர்கள் எழுதிய கதைகள், சிறுகதைகள் என்னென்ன என்று குதூகலமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த எங்களுக்கு, மரங்கள் சூழ்ந்த பகுதியில், ஒரு சிறிய குளத்தின் முன் எங்கள் டாடா சுமோ ஒரு குலுக்கலுடன் வந்து நின்ற பொழுதுதான், விசலூர் வந்து சேர்ந்துவிட்டோம் என்பது புரிந்தது.
ஆவலுடன், இறங்கி, எங்களுக்கெதிரில், சிங்கங்கள் வாய் பிளந்தவாறு காவல் புரியும் வாயிலுடன் இருந்த இந்தச் சிறிய கோயிலைப் பார்த்தோம்.
வெளியிலும் சரி, உள்ளேயும் சரி, சோழர் காலத்தைச் சேர்ந்த விசலூர்க் கோயில் அற்புத அழகு வாய்ந்தது என்று சொல்ல முடியாதுதான். அடக்க ஒடுக்கமாக, மரங்களால் சூழ்ந்த சோலைக்கு நடுவில், இருக்கும் இடம் தெரியாமல் அமர்ந்திருக்கும் சிறிய ஆலயம் அது. ஆயினும், இந்த இடத்தில் நாங்கள் கற்றுக்கொண்டது அதிகம்.
பழந்தமிழ் நாட்டின் கோயில்களை அக்காலத்து சிற்ப சாஸ்திர வல்லுனர்கள் எப்படி வடிவமைத்தார்கள்; கோயிலின் ஒவ்வொரு பாகத்திற்கும் என்ன பெயர்; கோயில்களை, அவை கட்டப்பட்டிருக்கும் விதத்தை வைத்து எப்படி வேறுபடுத்துவது, அவற்றில் பிரதான தெய்வங்கள் எங்கெங்கு அமைந்திருக்கும், அப்படி அமைந்திருக்கும் தெய்வங்கள் எவையெவை...இப்படிப் பல விஷயங்களை எங்களால் தெரிந்துகொள்ள முடிந்தது.
உடலுக்கு அவயவங்கள் அமைந்திருப்பது போலத்தான், ஒரு ஆலயத்தின் பல்வேறு பகுதிகளும். ஒரு தளத்தின் கீழ்ப்புறத்தைத் 'தாங்குதளம்' என்று அழைப்பார்கள் ('அதிட்டானம்' என்றும் சொல்வார்கள்). தாங்குதளத்தின் மேற்புறத்தில், தூண்கள் அதனுடன் இணையும் பகுதியில், சற்றே வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதிக்கு 'கம்பு' என்று பெயர். அதிலிருந்து சற்று உள்வாங்கியுள்ளதுதான் 'உபரிக்கம்பு'. உபரிக்கம்பிலிருந்து மேலெழும்புவது சுவர். சுவற்றிற்கு மேல்புறத்தை அலங்கரிப்பது 'உத்திரம்'. உத்திரத்திற்கு மேல் இருப்பது 'வலபி'. வலபிக்கு மேல், வளைவாக இறங்கும் பகுதிக்குப் பெயர் 'கபோதம்'.
மொத்தத்தில், ஒரு தளத்திற்கு மூன்று அடிப்படை உறுப்புகள்: 'அதிட்டானம்'. சுவர், மற்றும் கூரைப்பகுதி. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் ஒரு தளம் என்று குறிக்கப்படுகின்றது. இம்மூன்றும் இருப்பின், அது மண்டபமாகவும் இருக்கலாம், அல்லது கருவறையாகவும் இருக்கலாம். மண்டபம் என்று குறிப்பிட வேண்டுமானால், இந்த மூன்று உறுப்புகளூம் போதும்.
அதுவே, கருவறை என்றால்...? அதற்கு, அமைப்பு சற்றே மாறுபடும். ஒரு மண்டபத்திற்குத் தேவைப்படும் மூன்று பகுதிகளோடு, இன்னமும் மூன்று பகுதிகளைச் சேர்க்க வேண்டும் - அவை, 'க்ரீவா' (தமிழில் 'கழுத்துப்பகுதி'), சிகரம், கலசம், ஆகியவை. ஆக, இந்த ஆறு பகுதிகளும் ஒன்றாக இணைந்தால், அதை 'விமானம்' என்று அழைக்கிறோம். இந்த ஆறில் ஒன்று குறைந்ததென்றாலும்- அதை விமானம் என்று அழைப்பதற்கில்லை.
விசலூர்க்கோயில், 'ஏகதள' (ஒரே ஒரு தளம்) விமான அமைப்பைக் கொண்டது.
இந்த பகுதிகளை, சிற்பிகள் அவரவர் ரசனைக்கேற்றார்போல், அழகுபடுத்துவது வழக்கம். குறிப்பிட்ட ஆறு உறுப்பக்களைத் தவிர்த்து, இன்னும் பலவற்றைச் சேர்த்துக் கட்டுவதும் உண்டு. இதெல்லாம் அவரவரிடம் இருக்கும் திறமை, செல்வம், ஆகியவற்றைப் பொறுத்த விஷயம். இராஜ ராஜ சோழனைப் போல், பிரும்மாண்டமாகவும் கட்டலாம்; விசலூரைப்போல் சிறியதாகவும் அமைக்கலாம்.
விசலூர்க்கோயிலுக்கு, 'நிஷதராஜன்' என்னும் சிற்றரசன் பல கொடைகள் கொடுத்திருப்பதாகத் தகவல். (சாண்டில்யனின் 'கன்னிமாடம்' நாவலைப் படித்து இரசித்தவர்களுக்கு இவர் யார் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். இவர்தான் பாண்டியநாட்டுப் பொன்னமராவதியின் தலைவர்.). அவரால் பல நிவந்தங்களும் அளிக்கப்பட்டன.
அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஜேஷ்டாதேவியின் உருவச்சிலை (முதலாம் இராஜ இராஜ சோழனின் காலம் வரையில் செல்வாக்குடன் இருந்த இந்த தெய்வம், பிறகு ஏனோ அந்தச் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டது), இளமையான தோற்றத்துடன் காணப்பட்டது. பொதுவாக வயோதிகக் கோலத்தில்தான் இத்தெய்வம் வடிக்கப்பட்டதாம் - ஜேஷ்டா தேவியைப் பொறுத்தவரையில், பழுவேட்டரையர்கள்தான் அதை மிகவும் அழகுறச் செய்தார்கள் என்றும் சொல்கிறார்கள். புதுக்கோட்டைப் பகுதியில், பொதுவாக, 'ஜேஷ்டா தேவியின்' உருவத்தை இளமையாக அமைப்பது வழக்கம்.

இன்னும் சில உருவங்களையெல்லாம் பார்த்துவிட்டு, கொசுறாக விலாவாரியாக செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றையும் எழுத்து எழுத்தாகக் கூட்டிப் படிக்கும் முயற்சியில் இறங்கினோம். 'திருவமுதரிசி' என்ற எழுத்தைப் படிப்பதற்குள் களைத்து விட்டோம் (சோழர் காலத்தில், 'ழுவும்' 'முவும்' ஒரே மாதிரி இருக்கின்றன). 'ஒற்றெழுத்துக்கள்' வேறு கிடையாது. (எழுத்து எழுத்தாக படிப்பதினால் மட்டும் கல்வெட்டைப் படித்ததாக அர்த்தமில்லை - அர்த்தம் சரியாக வருகிறதா என்றும் பார்த்துதான் படிக்க வேண்டும், - டாக்டர். இரா.கலைக்கோவன் கையில் வைத்திருந்த கல்வெட்டுக் குறிப்புகளையும் பார்க்கக்கூடாது என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டார் !). ஐந்து படி தயிர், பத்து படி பருப்பு, மூன்று படி நெய், என்று மாற்றி மாற்றிப் படிக்க (இப்பொழுது தயிரமுது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?) என்று வாரி வழங்கியிருக்கிறார்கள்- யார் காலத்தில்? கல்வெட்டில் மேற்புறம் இருக்கும் 'காந்தளூர்ச் சாலை கலமறுத்தவர்' - இராஜ ராஜ சோழர் காலத்தில்தான் - அவரது பன்னிரண்டாவது ஆட்சியாண்டில்.

கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பிரகாரத்தில் அடுக்கப்பட்டிருந்த சில சிலைகள் அருகில் வந்து நின்றோம். கோயிலைச் சேர்ந்த ஒருவர் சுடச்சுட 'டீ' கொண்டு வந்து கொடுக்க, அதை உறிஞ்சியபடி சிலைகளை ஆராய்ந்தோம்.
ஒவ்வொரு புதிய இடத்திற்குச் செல்லும் பொழுது, பார்க்கும் அத்தனை விஷயங்களையும் மீறி, சில காட்சிகள் படம் பிடித்தது போல் மனதில் அப்படியே பதிந்து விடும். விசலூர்க்கோயிலிலும் அப்படிப்பட்ட காட்சி ஒன்று உண்டு. கோயிலின் பிரகாரத்தில் நாங்கள் அனைவரும் அவரவருக்கு வசதியாகத் தோன்றிய விதத்தில் அமர்ந்துகொள்ள, இரா.கலைக்கோவன் பிரகாரத்தில் போடப்பட்டிருந்த கல்பலகை ஒன்றில் உட்கார்ந்து கொள்ள, கடவுள் உருவச் சிலைகளை, அவற்றின் ஆடை அணிகலன்களைக்கொண்டு எப்படி அடையாளம் சொல்வது என்ற பாடம் ஆரம்பமாயிற்று. உதாரணம்: 'பைரவ'ரை அடையாளம் கண்டுகொள்வது எப்படி? அருகில் செதுக்கப்படும் நாய் உருவமும், உடையும்தான்! இவர்தான் முன்காலத்தில் 'ஷேத்திரபாலர்' என்று வழங்கப்பெற்றாராம். இந்த சம்பாஷணை வளர்ந்து கொண்டே போய், ரிக் வேத காலத்தில் மனிதர்கள் வாழ்க்கை முறையும், வேத பாட சாலைகளையும், இன்ன பிறவற்றையும் தொட்டுக்கொண்டு சென்றது வேறு விஷயம்.
விசலூர்க் கோயிலின் கர்ப்பக்கிருஹத்தை ஆராய்ந்துவிட்டு, நாங்கள் அங்கிருந்து கிளம்பிய பொழுது மணி பதினொன்றரை.
சோழ நாட்டின் வெயிலில், தார்ச்சாலைகள் அப்பொழுதே பற்றியெரிய ஆரம்பித்துவிட்டன. விசலூரிலிருந்து இரண்டே கி.மீ தொலைவிலிருந்த 'மலையடிப்பட்டி'யை நோக்கி நாங்கள் பயணித்தோம்.
Posted at 02:17 am by pavithra
Thursday, June 24, 2004
A Learning Experience - Foreword
அளந்தோம், அறிந்தோம் – சில கோயில்கள்
For a picture version of this post, go here.
வெள்ளிக்கிழமை, செப்டெம்பர் 15, 2003.
சென்னை நண்பர்களான நாங்கள் (ஐந்து பேர் கொண்ட குழு), திருச்சிராப்பள்ளி செல்லும் பொருட்டு, சுமார் ஏழேமுக்காலுக்கு ஈரோடு எக்ஸ்ப்ரெஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.
திருச்சிராப்பள்ளியின் ‘மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய’த்தைச் சேர்ந்த டாக்டர். இரா. கலைக்கோவன், திருச்சிராப்பள்ளியின் அருகாமையிலுள்ள சில குடைவரைக் கோயில்களையும், கங்கை கொண்ட சோழபுரத்தையும் இந்த ஐவர் குழுவுக்கு—அதாவது எங்களுக்குச் சுற்றிக் காண்பிப்பதாக இருந்ததால், மேற்படி ஏற்பாடு.
திருச்சியை நாங்கள் வந்தடைந்த பொழுது விடியற்காலை மணி இரண்டு. திருச்சியின் இரயில் நிலையத்திலிருந்து, ஆளற்ற தெருக்களில், காலை வீசிப்போட்டு நடந்து வந்து, பஸ்ஸ்டாண்டிற்கு அருகிலிருந்த ‘விஜய் லாட்ஜு’க்கு மூட்டை முடிச்சுகளுடன் வந்து சேர்ந்தோம். போட்டது போட்டபடியே படுக்கையில் விழுந்து விட்டு, பிறகு காலை ஐந்தரை மணிக்கு எழுந்து அரக்கப் பரக்க, தில்லை நகரை நாங்கள் அடைந்த பொழுது, ய்வு மையத்தின் டாக்டர். இரா. கலைக்கோவன், முனைவர் நளினி மற்றும் லலிதா மேடம் எங்களுக்காக ஒரு புன்னகையுடன் காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது காலை மணி எட்டு.
Posted at 09:47 pm by pavithra
Saturday, June 19, 2004
இந்தப் பயண வலைப்பதிவுக்கு வருகிற பலருக்கு என்கோடிங்/எழுத்துரு பிரச்சனை இருப்பதால், ஒவ்வொரு பதிவிலும், சம்பந்தப்பட்ட பயணக்குறிப்பை jpg கோப்பாகக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். எழுத்துரு பிரச்சனையால் படிக்க முடியாதவர்களுக்கு, வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். படிப்பவர்கள் கருத்து சொல்லுங்களேன்.
A lot of people have been telling me (via blog, and personal mails) - that they're having problems with Unicode fonts/Encoding...and aren't able to read this blog. I'm adding a picture version of each piece, to each post, for their benefit. Please tell me if it's viewable. After all, that's the whole purpose of a travelogue - it should raech the people for whom it's written.
Posted at 11:31 pm by pavithra
Sunday, May 02, 2004
A Q and A Session with Dr. R. Kalaikkovan
For picture version of this post, go here : Part 1 and Part 2
ஆவுடையார் கோயிலிலிருந்து கிளம்பிய நாங்கள், மீண்டும் புதுக்கோட்டை வந்து, அறைகளைக் காலி செய்து கொண்டு, திருச்சியை நோக்கிக் கிளம்பினோம். திருச்சிராப்பள்ளியின் ‘மா.இராசமணிக்கனார் வரலாற்றாய்வு மைய’த்தின் இயக்குனர் டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களின் இல்லத்திற்கு சென்று இறங்கினோம். அவரும் எங்களை ஆர்வத்துடன் வரவேற்றார். அவருடன் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றிப் பேசினோம். நாங்கள் அவரிடம் கேட்ட சில கேள்விகள் பின்வருமாறு:
டாக்டர். கலைக்கோவனிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:
1. தஞ்சைக் கோயிலின் விமானம் ஒரே கல்லால் னது அல்ல என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
சில வருடங்களுக்கு முன், ‘வரலாறு’ பத்திரிகைக்காக, பன்னிரண்டு நபர்கள் கொண்ட எங்கள் குழு, தஞ்சை பெரிய கோயிலை ஆய்வு செய்யச் சென்றிருந்தது. தஞ்சைப் பெரிய கோயிலை பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை ஆய்வு செய்யக் கிளம்பினோம். அப்படிப் பிரித்ததில், தஞ்சை விமானத்தின் ஆய்வு, எங்கள் குழுவில் புதிதாகச் சேர்ந்த ஒருவருக்குச் சென்று சேர்ந்தது. விமானத்தில் அவர் பார்க்கும் கல்வெட்டுக்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவரது ஆய்வுக் கட்டுரையை எழுத வேண்டும் என்று நான் அவருக்குச் சொன்னேன். எனக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரையே விமானத்தின் மீதும் ஏறச் சொன்னேன். ஒரு பெரிய கயிற்றின் உதவியைக் கொண்டு அவரும் மேலே ஏறினார் (ASIயைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் ஏறுவது வழக்கம்)- ஆனால் அவரால் அங்கிருந்த கல்வெட்டுக்களை இன்னதென்று இனங்காண முடியவில்லை. வேறு வழியில்லாததால், நானே விமானத்தின் மீது ஏறினேன். அங்கே, பிரம்மரந்திரக் கல்லின் மீது சில சிமெண்ட் பூச்சுக்களைக் கண்டேன். ASIக்காக அங்கே வேலை செய்து கொண்டிருந்த கொத்தனர் ஒருவரை அழைத்து, அந்தப் பூச்சுக்களைப் பற்றிக் கேட்டேன். ‘விமானம் ஏழெட்டுக் கற்களால் ஆனது’ என்றும், ‘அதை ‘சுதை’யால்(சுதை என்பது சுண்ணாம்பும் மணலும் கலந்த கலவை) பூசி மூடியிருந்தனர்’ என்றும் அவர் கூறினார்.
என்னால் இதை நம்ப முடியவில்லை. நீலகண்ட ஸாஸ்திரிகளும், மற்ற சரித்திர நிபுணர்களும் ‘விமானம் ஒரே கல்லால் ஆனது’ என்று கூறியிருந்தனர்.
இதற்குப் பிறகு, 1930க்களில் வெளிவந்திருந்த ASIயின் வெளியீடுகளையும், மற்ற சரித்திர சிரியர்களின் புத்தகங்களையும் படித்துப் பார்த்தேன். அவர்கள் எல்லோருமே ‘விமானமும் பிரம்மரந்திரக் கல்லும் ஒரே கல்லால் ஆனது அல்ல’ என்றே குறிப்பிட்டிருந்தனர். உண்மையில், தஞ்சைக் கோயிலின் விமானத்தின் கற்கள் ஆரஞ்சுச் சுளைகளைப் போல் அடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். விமானத்தின் மீது சுதைப் பூச்சு இருப்பதைக் காணலாம். விமானம் ஒரே கல்லால் ஆனது என்றால், வெளியிலே சுதைப் பூச்சு எதற்கு?
விமானம் ஒரே கல்லால் ஆனது இல்லை என்பதால், சாரங்களுக்கும் தேவையில்லாமல் போய்விட்ட்து. ‘சாரப்பள்ளம்’ என்ற கிராமத்திலிருந்து சாரங்களை உபயோகித்தார்கள் என்பதற்கும் எந்த தாரமும் இல்லை. சிறிய அளவிலான கற்களை, உருளைகளை( pulley system) உபயோகித்து மேலே ஏற்றினார்கள்.
2. ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலில், இளவரசர் அருள்மொழி வர்மர் காவிரி நதிக்குள் விழுந்ததாகவும், பிறகு காப்பாற்றப்பட்டதாகவும் கல்கி விவரித்திருக்கிறார். இப்படியரு நிகழ்ச்சி உண்மையில் நடந்ததற்கு சரித்திர ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா?
இல்லை. அந்த நிகழ்ச்சி கல்கியின் கற்பனையில் உருவானது.
3. ஏழாம் நூற்றாண்டிலேயே, பல்லவர்கள் அற்புத முகபாவங்களுடைய சிற்பங்களை வடித்தார்கள். சோழ சிற்பங்களில் அத்தகைய உயிரோட்டம் இல்லை. செதுக்கும் சிற்பிகளின் மனநிலைக்கு ஏற்றாற்போல், சிற்பங்களின் உயிரோட்டமும் அமையும் என்ற கருத்தை உண்மையென்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், சோழ சிற்பிகள், சிற்பங்களைச் செதுக்கும் பொழுது, அவர்களது வேலைக்கு ஏதேனும் குந்தகம் ஏற்பட்டிருக்குமோ? அவர்களது மனநிலை அவர்கள் செதுக்கிய சிற்பங்களையும் பாதித்ததா?
சிற்பிகள் வடிக்கும் சிற்பங்கள் அவர்களது மனநிலையைப் பிரதிபலிக்கும் என்பது உண்மையென்றாலும், சோழர்கள் காலத்தில் அவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ‘சிற்பங்கள்’ இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் ’ஆகம’ விதிகள் பல்லவர்களின் காலத்தில்தான் வடிவம் பெற ஆரம்பித்தன. அதனால், பல்லவர் காலத்துச் சிற்பிகள் தங்கள் விருப்பம் போல், தங்கள் கலைத் திறனையெல்லாம் காட்டிச் சிற்பங்கள் வடித்தனர். சோழர் காலத்தில், ஆகம விதிகள் முழுமை பெற்றுவிட்டன. ‘இப்படித்தான் சிலைகளை வடிக்க வேண்டும்’ என்ற கட்டுப்பாடுகள் உருவாகிவிட்டன. இதனால், தங்கள் கலைத்திறனையும் எண்ண ஓட்டங்களையும் சோழ சிற்பிகளால் அவ்வளவாக வெளிக் கொணர முடியவில்லை.
இதையெல்லாம் மீறி, ‘தாராசுரத்’திலும், ‘கங்கை கொண்ட சோழபுரத்’திலும் , அற்புதமான கற்பனைத் திறத்துடன் கூடிய அழகிய சிற்பங்களைக் காணலாமே?
4. இராஜராஜ சோழன் எப்படி இறந்தான்? இது சம்பந்தமாகக் கல்வெட்டுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா?
இராஜ ராஜனின் மரணம் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் இல்லை.
5. ஆதித்த கரிகாலன் கடம்பூரில்தான் கொலை செய்யப்பட்டானா? ‘சம்புவரையர்கள் இந்தக் கால கட்டத்திற்கு இரண்டு/மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரே தோன்றினர்’ என்று முன்னொரு முறை நீங்கள் கூறினீர்கள். அப்படியானால், தித்த கரிகாலனின் காலத்தில் கடம்பூர் யார் வசம் இருந்தது? ‘உடையார்’ சரித்திர நாவலின்படி, ஆதித்த கரிகாலனின் இறந்த உடலில் வீர நாராயணபுரத்து ஏரியில் மிதக்கின்றது. கடம்பூர் கோட்டையின் பாதுகாப்புப் படையை மீறி ஆதித்த கரிகாலனின் உடல் எப்படி ஏரிக்கு வந்து சேர்ந்திருக்க முடியும்?
சுந்தர சோழர் மற்றும் இராஜராஜ சோழனின் காலத்தில்தான் சம்புவரையர்கள் இருக்கவில்லையே தவிர, இவர்களுக்குப் பின் வந்த சோழர்களின் காலத்தில் அவர்கள் இருந்தனர். ஆதித்த கரிகாலன் கடம்பூரில்தான் கொல்லப்பட்டான் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. வீரநாராயணபுரத்து ஏரியில் அவன் உடல் மிதந்தது என்றே வைத்துக் கொண்டாலும், சுற்றுப்பட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் அவன் கொலை செய்யப் பட்டிருக்கலாம். இவற்றுக்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. வெறும் ஊகம் தான்.
6. சோழர் காலத்தில் பெண் கல்வியைப் பற்றிச் சொல்ல முடியுமா?
ஆண்களுக்குச் சமமான கல்வி வாய்ப்புகள் பெண்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. இல்லாவிட்டால் இளவரசி குந்தவையைப் போன்ற அறிவாளியை நாம் எப்படிப் பெற்றிருக்க முடியும்?
7. தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுரத்தில், தலையில் தொப்பியுடன் வெள்ளைக்காரர் சிற்பம் (சீனாக்காரரைப் போல்) ஒன்று இருக்கிறதே...? இது பற்றி உங்கள் கருத்து என்ன?
நாயக்கர் காலத்தில் பல சிற்பங்கள் தஞ்சைக் கோயிலில் புதிதாகச் சேர்க்கப்பட்டன. நீங்கள் குறிப்பிடும் சிற்பம் இரண்டாம் சரபோஜி மன்னரின் காலத்தைச் சேர்ந்தது.
8. இராஜராஜ சோழனின் அரண்மனையைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. அந்த அரண்மனை (அல்லது கோட்டை) இருந்திருக்கக் கூடிய இடம் எது என்று உங்களால் சொல்ல முடியுமா? நமது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏன் அதை அகழ்வாராயக் கூடாது?
இன்றைய தேதியில், தஞ்சையில் சோழர்களின் அரண்மனை என்று எதுவும் இல்லை. அரண்மனை இருந்திருக்கக்கூடிய இடத்தில் ஒரு மேடு மட்டுமே இருக்கிறது. இக்காலத்தில் அதைச் ‘சோழன் மேடு’ என்று அழைக்கிறார்கள்.
9. பாண்டியர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த பொழுது, ஒரே சமயத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்கள் தென் தமிழகத்தை ஆண்டார்கள் என்பதற்குச் சரித்திரச் சான்றுகள் இருக்கின்றன. பராந்தக சுந்தர சோழரின் காலத்தில், வீர பாண்டியனோடு வேறு பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்தார்களா?
பராந்தக சுந்தர சோழரின் காலத்தில் வீர பாண்டியன் மட்டுமே ஆட்சி புரிந்தான்.
10. ‘ரவிதாஸனும் அவனைச் சேர்ந்தவர்களும் சேர நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் காந்தளூர்ச் சாலையில் நடந்த போரில் பங்கெடுத்துக் கொண்டார்கள்’ என்றும் எழுத்தாளர் பாலகுமாரன் கூறுகிறார். இதற்கு சரித்திரச் சான்றுகள் இருக்கின்றனவா? ‘உடையார்குடி’யில் பொறிக்கப்பட்டுள்ளவைகளைத் தவிர, அவர்களைப் பற்றிய கல்வெட்டுக்கள வேறு எங்கேனும் உண்டா? ‘ரவிதாசனும் அவனது கூட்டாளிகளும் சேர நாட்டைச் சேர்ந்த சோழிய பிராமணர்கள் என்ற முடிவுக்கு பாலா எப்படி வந்தார்?
அக்காலத்தில் காந்தளூர்ச் சாலையில், போர்முறைகளில்(Martial Arts) பயிற்சி கொடுக்கும் கடிகை ஒன்று இருந்திருக்கிறது. ஒரு சமயம், இராஜராஜ சோழன் அனுப்பிய தூதுவனை அந்தக் கடிகையைச் சேர்ந்தவர்கள் அவமதித்துவிட்டதால், மன்னன் அவர்களுடன் போர் தொடுத்து, கடிகையைத் தரை மட்டமாக்கினான். இந்தச் சம்பவத்துடன், ரவிதாசனுக்கோ, ஆதித்த கரிகாலனின் கொலைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை.
11. இராஜராஜனின் காலத்தில், தஞ்சைப் பெரிய கோயிலின் விமானம் முழுதும் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது என்று திரு. குடவாயில் பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். இது உண்மையா?
இல்லை. விமானம் எந்தக் காலத்திலும் தங்கத்தால் வேயப்படவில்லை.
12. தஞ்சைப் பெரிய கோயிலின் மேல்தளத்தின் உள்சுற்றில் (மூலஸ்தானத்துக்கு மேல்புறம்), எண்பத்திரண்டு பரதநாட்டியக் கரணங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. நூற்றியெட்டுக் கரணங்களையும் ஏன் முழுவதுமாகச் செதுக்கவில்லை? முழுமையடையாத கோயிலில்,ஏன் வழிபாடு தொடங்கப்பட்டது? இதற்கும் இராஜராஜனின் மரணத்திற்கும் தொடர்பு உண்டு என்கிறார்களே, உண்மையா?
இராஜராஜனின் மரணத்தினால்தான் கோயில் வேலைகள் நின்றுவிட்டன. பரதநாட்டியக் கரணங்கள் மட்டுமல்ல, பல ஓவியங்களும் சிற்பங்களும் கூட முடிக்கப்படவில்லை. என்ன காரணத்தினாலோ, இராஜேந்திர சோழன் அவற்றை முடிப்பதில் தீவிரம் காட்டவில்லை.
13. சோழ அமைச்சர் அநிருத்தப் பிரம்மராயர், மூன்று அரசர்களுக்கு அமைச்சராகப் பதவி வகித்தது எப்படி? சுந்தர சோழர் காலத்தில் வயதில் மிக இளையவராக இருந்தாரோ? அப்படியானால், அவ்வளவு இளம் வயதில், அமைச்சர் பதவியை அவரால் எவ்வாறு அடைய முடிந்தது?
‘பொன்னியின் செல்வ’னின் அநிருத்தப் பிரம்மராயரும், ‘உடையார்’ சரித்திர நாவலின் ‘கிருஷ்ணன் இராம’னும் வேறு வேறு மனிதர்கள். அநிருத்தர், சுந்தர சோழரின் அமைச்சராகப் பதவி வகித்தார். கிருஷ்ணன் இராமன், இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் தளபதியாகப் பதவி வகித்தவர். மூன்று அரசர்களுக்குத் தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகித்த ஒரே மனிதர் ஒட்டக்கூத்தர் மட்டுமே.
14. ‘அருள்மொழி வர்மர், உத்தம சோழர் உயிரோடிருக்கும் பொழுதே அரியணை ஏறிவிட்டார்’ என்று ‘உடையார்’ நாவலில் எழுத்தாலர் பாலகுமாரன் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? அப்படியானால், தன் சிற்றப்பா உத்தம சோழர், அரசாட்சியில் சை கொண்டிரூகும் காலம் வரையில், தான் அரியனை ஏறப்போவதில்லை’ என்று அருள்மொழிவர்மர் கூறியதாகக் குறிப்பிடும் ‘திருவாலங்காட்டுச் செப்பேடு’களின் கூற்றை இது மறுக்கிறதே? உத்தம சோழரின் காலத்திற்குப் பிறகுதான் அருள்மொழி வர்மர் அரியணை ஏறினார் என்று நம்பப்படுகிறதே? இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
இது பற்றிய விவரங்கள் எந்தக் கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகக், கல்வெட்டுக்களைப் பொறுத்தவரை, உத்தம சோழரின் காலம் இருண்ட காலமாகவே கருதப்படுகிறது. வெகு சில கல்வெட்டுக்களே அவர் காலத்திலிருந்து நமக்கு மிஞ்சியிருப்பதால், இராஜராஜன் பதவியேற்ற போது, உத்தம சோழர் இறந்துவிட்டாரா, அல்லது பதவியிறக்கம் செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.
15. ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பற்றி ‘உடையார்குடி’க் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், இளவரசன் எப்படி இறந்தான் என்பதை விவரிக்கும் குறிப்புக்கள்/கல்வெட்டுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா?
‘உடையார்குடி’யில் கண்டெடுத்தவை தவிர, இது விஷயமாக வேறு கல்வெட்டுக்கள் எதுவும் இது வரை கண்டெடுக்கப்படவிலை. ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களின் பெயர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.
‘வடக்கிருத்தல்’, இராஜகேசரி/பரகேசரி, என்று இன்னும் பல விஷயங்களைப் பற்றி, பல மணி நேரம் அவரிடம் பேச வேண்டுமென்று சைதான். னால், இரவு பத்து மணிக்கு Rockfort Express எங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் என்பதால், அவரது இல்லத்தில் அறுசுவை உணவு அருந்திவிட்டுக் கிளம்பினோம்.
ஒன்பது முப்பதுக்கு திருச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினோம். அங்கிருந்தே பஸ் பிடித்துச் செல்வதாகச் சொன்ன ராஜாவுக்கும், திரு. சீதாராமனுக்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு, ரயிலேறினோம். மறுநாள் காலை நாலரை மணி சுமாருக்கு சிங்காரச் சென்னை வந்து சேர்ந்தோம்.
*************************
Posted at 06:59 am by pavithra
|
|
|